ஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்!

பத்துக் கோடி ஏழைகளுக்கு முழுமையான மருத்துவ வசதி அளிக்கும் ‘ஆரோக்கிய இந்தியா’ திட்டத்துக்கான நடை முறைகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அமைச்சரவை. இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மருத்துவச் செலவுகளை அரசே மேற்கொள்ளும். அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்ல, தக்க தனியார் மருத்துவமனைகளிலும் சேர்த்து சிகிச்சை அளிக்கலாம் என்பது முக்கிய அம்சம். இப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் ஓராண்டுதான் இருக்கிறது என்பதால், அரசு விரைந்து செயல்பட்டால்தான் மக்களால் பலன்பெற முடியும்.

தேசிய அளவில் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தை ஒருங் கிணைக்கவும், மாநில அரசுகளுடன் சேர்ந்து அமல்படுத்தவும் ‘உச்சநிலை பேரவை’ அமைக்கப்பட வேண்டும். சுகாதார வசதிகளை அளிக்க வேண்டிய அரசியல் சட்டரீதியான கடமை மாநில அரசுகளுக்கு இருப்பதால், இத்திட்ட அமலுக்கென்றே தனி முகமைகளை உடனடியாக ஏற்படுத்துவது அவற்றின் பொறுப்பா கிறது. இந்தத் திட்டத்துக்கென்றே தனிச் சட்டம் இயற்றப்பட்டு, சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

‘உணவு பெறும் உரிமை’, ‘தகவல் அறியும் உரிமை’போல, ‘மருத்துவச் சிகிச்சை பெறும் உரிமை’ அனைவருக்கும் வழங்கப் பட வேண்டும். இதற்கெனச் சட்டம் இயற்றப்படுவதால் மருத்துவமனை சார்ந்த சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகள் மீது அரசு கட்டுப்பாடு செலுத்த முடியும். மூத்த குடிமக்கள், மகளிர், குழந்தை கள் இத்திட்டப்படி சிகிச்சை பெற முடியும். பட்டியல் இனம், பழங் குடிகள் குடும்பங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. இந்தப் பிரிவினர் அனைவரையும் இதில் சேர்க்கும் துணிச்சலான முடிவை அரசு எடுக்க வேண்டும். இதற்கு ஆகும் நிதிச் செலவை வரி செலுத்துவோரால் தாங்க முடியும். உலகிலேயே அதிகம் பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் என்று இது பெயர் பெற்றுவிட்டது.

‘பணம் இல்லை என்பதற்காக மறுத்துவிடாமல், சிகிச்சை அளிப்பதுதான் அனைவருக்குமான மருத்துவ சேவை’ என்று ‘உலக சுகாதார நிறுவனம்’ வரையறுத்திருக்கிறது. 2030-ம் ஆண்டுக்கான ‘குன்றாத வளர்ச்சி இலக்கு’க்கு அரசு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. அதற்கான காலக்கெடு இன்னும் 12 ஆண்டுகள்தான் என்பதால், இலக்கை எட்ட இந்தியா தொடர்ந்து உழைக்க வேண்டும். ஆண்டுதோறும் வரவு-செலவுத் திட்டத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கிக்கொண்டே போனால் மட்டும் போதாது, சுகாதார வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சமூகக் காரணிகளையும் மேம்படுத்த வேண்டும்.

அனைவருக்கும் சுகாதார வசதி அளிப்பதில் நாடு முழுவதற்கும் பொதுவான கொள்கையை வகுப்பதைவிட அந்தந்த மாநிலத்துக்கென்று தனியாக வகுத்துச் செயல்படுவது பலன் தரும் என்று ‘நிதி ஆயோக்’ சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆனால், தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் என்பது நாடு முழுவதற்குமான திட்டம் என்பதை மறுப்பதற்கில்லை. மாநில அரசுகளுக்கு இதில் முக்கியப் பங்கு உண்டு. இந்தத் திட்டம் அனைவருக்கும் பலன் தருமாறு அமல்படுத்துவது உண்மையிலேயே சவாலான வேலை. அரசு இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்!

Check Also

இதனை தடுக்க வேண்டாமா?

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தற்போது சபரிமலை ஐயப்பன் சீசன் முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் தினதோறும் …