குஜராத்தின் இன்றைய நிலை – எதில் முதல் இடம் ஜெயலலிதா விளக்கம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தருமபுரி தொகுதியில் தேர்தல் பரப்புரை செய்தபோது கூறியதாவது:

வாக்காளப் பெருமக்களே! ஓர் அரசு மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசா என்பதை கணிக்க உதவுவது பல்வேறு மனித வளக் குறியீடுகள். இதன் அடிப்படையில் குஜராத்தை  விட தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது.

மொத்த மக்கள் தொகையில் 16.6 விழுக்காடு மக்கள் குஜராத்திலே வறுமைக்  கோட்டிற்கு கீழே உள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டில் 11.3 விழுக்காடு மக்கள் மட்டுமே  வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். குழந்தை இறப்பு விகிதத்தில் தமிழ்நாடு இரண்டாவது  இடத்தில் இருக்கிறது. ஆனால், குஜராத் மாநிலம் 11-ஆவது இடத்தில் இருக்கிறது. இன்னும் சற்று விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தமிழ் நாட்டில் உயிருடன் பிறக்கும்  1,000 குழந்தைகளில் 21 குழந்தைகள் மட்டுமே ஒரு வயது அடைவதற்குள் இறக்கின்றன.  ஆனால், குஜராத்தில் 1,000 குழந்தைகளுக்கு 38 குழந்தைகள் இறக்கின்றன. தமிழ்நாட்டில் தாய் இறப்பு விகிதம் 90 என்ற அளவில் இருக்கிறது. ஆனால், குஜராத்தில் 122 என்ற அளவில் இருக்கிறது.

தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருக்கும்  தொழிலாளர்களில் 14.3 விழுக்காடு தொழிலாளர்கள் பட்டதாரிகள். ஆனால், குஜராத்தில் 10 விழுக்காடு தொழிலாளர்களே பட்டதாரிகளாக உள்ளனர்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அதிக மக்கள் பயன்பெறும் ஒரே மாநிலம் தமிழ்நாடு.  ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறான நிலைமை குஜராத்தில் நிலவுகிறது. மாநிலத்தின்  மொத்த உள் நாட்டு உற்பத்தியில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆனால்,  குஜராத் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் மூன்றாவது இடத்தில்  இருக்கிறது. 2012-2013 ஆம் ஆண்டில் மட்டும் 15,252 கோடி ரூபாய் அந்நிய முதலீடு தமிழ்  நாட்டில் பெறப்பட்டு இருக்கிறது. இதே காலகட்டத்தில் குஜராத்தில் வெறும் 2,676 கோடி  ரூபாய் மட்டுமே அந்நிய முதலீடாக பெறப்பட்டு இருக்கிறது. வாக்காளப் பெருமக்களே! சிந்தித்துப் பாருங்கள். 15,252 கோடி ரூபாய் எங்கே? வெறும் 2,676 கோடி ரூபாய் எங்கே?

மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது. ஆனால் குஜராத்  11-ஆவது இடத்தில் இருக்கிறது.  தமிழ் நாட்டில் உள்ள மொத்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 36,996. ஆனால்,  குஜராத்தில் வெறும் 22,220 தொழிற்சாலைகள் தான் உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள  தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 90 ஆயிரம். ஆனால், குஜராத்தில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் 10 லட்சத்து 50 ஆயிரம் தான்.  2011-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 732.  ஆனால், குஜராத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 16 தொழில்கள் தான் துவங்கப்பட்டன.

உணவு தானிய உற்பத்தியில் 2011-2012 ஆம் ஆண்டு 101.51 லட்சம் மெட்ரிக் டன்  என்ற உயர் அளவை எட்டி தமிழகம் சாதனை படைத்துள்ளது. இதற்கான மத்திய அரசின் விருதும் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கிறது. ஆனால், குஜராத் மாநிலத்தின் உணவு தானிய  உற்பத்தி வெறும் 88.74 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் தான் உள்ளது. 2013-2014 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தி 103 லட்சம்  மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இது போன்று பல துறைகளில் குஜராத்தை விட தமிழ் நாடு தான் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
வாக்காளப் பெருமக்களே! இப்போது நான் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் இந்தியாவிலேயே பலருக்கு வியப்பை அளிப்பவையாக இருக்கும். பலருக்கு இன்று தான்  கண்களை திறந்து விட்டதைப் போல தோன்றும். இது தான் உண்மை நிலை. இதுவரை  எல்லாவற்றிலுமே இந்தியாவிலேயே குஜராத் தான் முதன்மையான மாநிலம் என்ற ஒரு மாய தோற்றம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

ஆனால், அது உண்மை அல்ல. உண்மை நிலை என்னவென்றால் குஜராத் தன்னை  விளம்பரப்படுத்திக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தது. ஆனால்,  தமிழ் நாடு எனது தலைமையில் வெற்றுப் பேச்சிலும் விளம்பர வெளிச்சத்திலும் கவனம் செலுத்தாமல், மக்களுக்குத் தொண்டு ஆற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தது. சதா சர்வ காலமும் மக்கள் நலன் பற்றியே சிந்தித்து கர்ம சிரத்தையுடன்  கடமை ஆற்றியதால் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட  முன்னேற்றக் கழக அரசு தமிழ் நாட்டில் இத்தனை சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும்  மத்திய அரசு அமைய நீங்கள் ஆதரவு தந்தால் இதைவிட அதிகமான சாதனைகளை  நாங்கள் நிகழ்த்திக் காட்டுவோம் என்றார்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *