கொரோனா பாதித்தவர்களை கைவிடுகிறதா தமிழக அரசு ? தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் DSR சுபாஷ் கேள்வி?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை கைவிட்டு வருவது போன்ற ச‌ந்தேக‌ம் எழுவதாக, மக்கள் நலனில் உள்ள அக்கறையில் தமிழக அரசை சாடியுள்ளார் அகில இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்க செயலாளர் மறறும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத் தலைவர் திரு. DSR. சுபாஷ் அவர்கள். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பரபரப்பான அறிக்கையில்,

ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த சுகாதாரத்துறை தற்போது கடும் விமர்சனங்களை சந்திக்க ஆரம்பித்துள்ளது எனவும் மாவட்ட வாரியாக தினமும் எத்தனை நபர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றது என்ற தகவல் தர மறுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் குறைந்தபட்சம் சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டத்திலாவது தினமும் எத்தனை நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப் படுகிறார்கள் என்று சொல்லலாம், ஆனால் அதைக்கூட சொல்ல மறுக்கிறது அரசு என சாடியுள்ளார்.

தினமும் மாவட்ட வாரியாக எத்தனை பேர்கள் குணம் அடைகின்றனர், எத்தனைபேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சொல்லும் சுகாதாரத்துறை, மாவட்ட வாரியாக தினமும் எத்தனை நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டது என்பதை சொல்ல வேண்டாமா ? எனக் கூறும் அவர், ஒரே ஒருவருக்கு கொரோனா என்று தெரிந்த உடன் ஒரு பெரிய வணிக வளாகத்தையே மூடிய அரசு, இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டுமே 1000 பேர்கள் வரை பாதிக்கப்பட்ட நிலையில் எடுத்துவரும் நடவடிக்கைகள் என்ன ? என அவர் கேள்வி எழுப்புகிறார்.

அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் கடந்த சில நாட்களாக மிகவும் அவமதிக்கப்படுவதாகவும். அலைக்கழிக்கப் படுவதாகவும் கூறும் அவர், மேலும் இவ்வாறு வரும் தகவல்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, என வும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 36 மணி நேரங்கள் கடந்தும் சிகிச்சைக்கு ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளதாக வரும் தகவல் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது என கூறியுள்ளார்.

கடந்த மாதமே கொரோனா நோயாளிகளுக்காக ரயில் பெட்டிகள் கொரோனா வார்டாக தயாரிக்கப்பட்டதாகவும், நந்தம்பாக்கம் டிரேட் சென்டரும் கொரோனா வார்டாக உருவாக்கப் பட்டதாக தொடர்ந்து செய்திகள் வந்தன, பல திருமண மண்டபங்கள் உட்பட பல கட்டிடங்களை கொரோனா வார்டுகளாக்க மாநகராட்சி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்ட நிலையில், அந்த இடங்கள் எல்லாம் என்ன ஆனது என்ற கேள்வியும், வெறும் விளம்பரத்திற்காகத்தான் அவற்றை அரசு பயன் படுத்தியதா என்ற கேள்வியும் எழுவதாக கூறியுள்ளர்.

அரசு மருத்துவ மனைகளில் இடமில்லை என்று விரட்டப்படுவோரை இந்த இடங்களில் தங்க வைத்து சிகிச்சை வழங்க வேண்டியதுதானே! மேற்படி இங்கே மிகப்பெரியதான ஒரு சந்தேகமும் எழுகிறது… இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்களால் நிராகரிக்கப் பட்ட தனியார் மருத்துவ மனைகளுக்கு போகும்படி கொரோனா நோயாளிகள் விரட்டியடிக்கப் படுவதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தமது வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு, அடுத்த வேளை உணவிற்கு என்ன வழி என்று பெரும்பாலான மக்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது, லட்சம் லட்சமாய் செலவு செய்து கொரோனாவில் இருந்து அவர்களை எப்படி அவர்களால் பாதுகாத்துக் கொள்ள முடியும்?

கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆட்பட்டவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து பின் வாங்கும் நிலையை அரசு மேற்கொண்டால், அப்பாவி ஏழைகளின் உயிர்கள் கேள்விக்குரியாகி விடும், சின்னத்திரை படப்பிடிப்பில் 60 நபர்களை அனுமதிக்கும் அரசு, வழிபாட்டு தளங்களை இதே கட்டுப்பாடுகளுடன் அனுமதித்திருக்கலாம் என கூறியுள்ளார்.

காலை முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் விற்பனையை 500, 1000 பேர்களை வைத்து நடத்தும் அரசு தினமும் காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம், வழிபாட்டு தளங்களை அனுமதிக்க முடியாதா என்ன? கொரோனாவால் பாதிக்கப் படுபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவி செய்ய வேண்டும் என்று சாத்தியமே இல்லாத ஒன்றை அறிவித்த எதிர்கட்சி தலைவர் இப்போது ஏற்பட்டுள்ள நிலைக்காகவாவது போராடுவாரா ? என எதிர்கட்சி தலைவரையும் சாடியுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் இத்தனை நபர்களுக்கு சிகிச்சை அளித்ததாகவும், அதற்கான செலவுகள் இத்தனைக் கோடிகள் ஆனது என்று விரைவில் சொல்லப்படும்,சொல்லட்டும், அதனால் மக்கள் உயிர் பாதுகாக்கப்பட்டாலே போதும்.

இந்த நேரத்தில், நேற்றுவரை ஈ ஓட்டிக் கொண்டிருந்த தனியார் மருத்துவமனைகள் திடீரென்று மாஃபியாக்கள் போல செயல்பட ஆரம்பித்திருப்பது, அரசின் மீது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது. தனியார் மருத்துவ மனைகள் இத்தருணத்தில் கொள்ளையடிப்பதற்காகவே, நோயாளிகள் அலைக்கழிக்கப் படுவதான சந்தேகம் வலுக்கிறது, அரசே அதற்கான வழி வகைகளை ஏற்படுத்தித் தருவதாக எண்ண வைக்கிறது.

இன்றைய நிலையில் சென்னையில் ஒருவருக்கு கொரோனா வர வேண்டும் என்றில்லை, ஒருவருக்கு எந்த ஒரு பிரச்சினை என்றாலும் முதலில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று அந்த நோயாளியை பரிசோதனை செய்து அதன் விவரங்களை அரசு தர வேண்டும் என்பதுடன், அனைத்து கொரோனா நோயாளிகளையும் அரசே முழுமையாக குணப்படுத்த வேண்டும்

நடப்பவற்றைப் பார்க்கும்போது பலருடைய பாராட்டுகளைப் பெற்ற மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கையை விரித்து விட்டாரோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டு உள்ளது.

மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார் ?

தாயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த இரயில் பெட்டிகள், ட்ரேட் சென்டர்,சட்டக்கல்லூரி,மண்டபங்கள் ஆகியவற்றை ஏன் இதுவரை பயன்படுத்தவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டும்.

வெண்டிலேடர்கள் வாங்கிய பிரச்சினைகள், டெஸ்ட் கிட்டுகள் திருப்பி அனுப்பியது, கொரோனாவிற்காக குவிந்த கோடிகள் ( நிதிகள் ) மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் பயண்பட எத்தனை படுக்கைகள் வாங்கப்பட்டது…. இதுபோன்ற ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதில் இல்லை…

ஆளும் கட்சி, எதிர்க் கட்சி மற்றும் அனைத்து கட்சிகளும் உடனடியாக ஒருங்கிணைந்து, இதை வைத்து மட்டமான அரசியலில் ஈடுபடாமல் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற முன் வாருங்கள். தனியார் மருத்துவமனை கொள்ளைகளை இரும்புக் கரங்களைக் கொண்டு ஒதுக்குங்கள். அரசு மருத்துவமனை ஊழியர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தாருங்கள்.

அனைத்து கட்சிகளும் உங்களுடைய பெருமைகளையும் அறிவுரைகளை வாரி வழங்குவதை நிறுத்துங்கள். மக்கள் தவித்துக் கொண்டு உள்ளனர். ஊடகங்களில் வரும் விவாத நிகழ்ச்சிகளில் ஆளாளுக்கு புளுகுவதை தடுத்து நிறுத்துங்கள்.

எதிர் கட்சிகளின் பங்களிப்பும் அவசியம் தேவை. பரிசோதனை செய்வதே குறைக்கப்பட்டு வருவது ஏன் ?

ஒரே நாளில் சென்னையில் மட்டுமே ஆயிரம் பேர்கள் வரை பாதிக்கப்பட்ட நிலையில் இத்தகைய தளர்வுகள் ஏன் ?

விரைவில் சென்னையில் டாஸ்மாக் விற்பனை துவங்குவதற்கான முதற்கட்ட உள் வேலைகளா ?

தமிழக அரசே ! சென்னை மக்களை காப்பாற்றுங்கள் ! தனியார் மருத்துவமனை கொள்ளைகளை கட்டுப்படுத்துங்கள் ! என அரசை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Check Also

தொடரும் PPFA வின் மக்கள் நலப்பணி…

கொரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் மக்களுக்காக கடந்த 15 நாட்களுக்கு மேலாக மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …