டெல்லி சட்டப் பேரவையை கலைக்க பரிந்துரை!

டெல்லியில் மறுதேர்தல் நடத்த பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, டெல்லி சட்டப் பேரவையை கலைக்க பரிந்துரைத்து குடியரசுத் தலைவருக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிக்கை அனுப்பினார்.

டெல்லியில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வரான ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால், 49 நாள் ஆட்சிக்குப் பிறகு, லோக்பால் மசோதாவை அமல்படுத்த முடியவில்லை எனக் கூறி ராஜினாமா செய்தார். அதன்பிறகு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது

அங்கு சட்டப் பேரவையைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தக் கோரி ஆம் ஆத்மி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையின்போது, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாக துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தெரிவித்திருந்தார்.

அதன்படி, பாஜக, காங்கிரஸ் தலைவர்களை அழைத்து துணை நிலை ஆளுநர் நேற்று ஆலோசனை நடத்தினார். பாஜக சார்பில் மாநில தலைவர் சதீஷ் உபாத்யா, துணை நிலை ஆளுநரை சந்தித்துப் பேசினார். அப்போது, டெல்லியில் மறு தேர்தல் நடத்த விரும்புவதாக பாஜக தரப் பில் தெரிவிக்கப்பட்டது. ஹரியாணா மற்றும் மகாராஷ்டிரா மாநில தேர்தலில் வெற்றி கிடைத்திருப்பதால் தேர்தலைச் சந்திக்க பாஜக முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் தரப்பில் நஜீப் ஜங்கை சந்தித்த ஹாரூண் யூசூப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கேஜ்ரிவால் ராஜினாமா செய்த மறுநாளிலிருந்தே, மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். துணை நிலை ஆளுநரிடமும் அதையே கூறியுள்ளோம்” என்றார்.

அனைத்துக் கட்சிகளும் மறுதேர்தலுக்கு விருப்பம் தெரிவித்திருப்பதையடுத்து, டெல்லி சட்டப்பேரவையை கலைக்க பரிந்துரைத்து குடியரசுத் தலைவருக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிக்கை அனுப்பினார்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *