திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் தங்கப்புதையல் திருடப்படுகிறதா?

கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலின் சொத்து மதிப்புகள் குறித்து விசாரணை செய்ய இந்திய உச்சநீதிமன்றம் நியமித்த முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமனியம் தலைமையிலான குழு தனது விசாரணையை முடித்து அந்த 577 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்ட பொக்கிஷங்கள் இருப்பது கடந்த 2011ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த பொக்கிஷங்களை மதிப்பிடவும், அது தொடர்பிலான விசாரணையை மேற்கொள்ளவும் உச்ச நீதிமன்றம் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் தலைமையிலான ஒரு குழுவை நியமித்தது.

அந்த குழு அங்கு பயணித்து தங்கி விசாரணை செய்து பின் அது தொடர்பில் சமர்பித்த அறிக்கையில், கோயில் கணக்குகளை தணிக்கை செய்ய முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையிலான குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் அறக்கட்டளை மற்றும் அது சார்ந்த நிறுவனங்களின் கடந்த 25 ஆண்டு காலத்திற்கான கணக்கு வழக்குக்கள் தொடர்பிலான தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கோவில் நிர்வாகம் தொடர்பிலான வங்கி கணக்குகளையும் மற்ற எல்லா பதிவுகளையும் கோவிலின் தற்போதைய அறங்காவலர், மூலம் திருநாள் ராமவர்மா நீதிமன்றத்தில் சமர்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறபிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதாக கருதப்படும் ரகசிய ‘பி’ அறையை திறக்க மன்னர் குடும்பத்தினர் அனுமதி வழங்கவில்லை என்றாலும் அந்த ரகசிய ‘பி’ அறை இதற்கு முன்னர் பல முறை திறக்கப்பட்டதற்கு நேரில் கண்ட சாட்சியங்கள் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறையில் இருக்கும் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை தங்களுக்கு சொந்தமான சொத்துக்களாக கூறி மன்னர் குடும்பத்தினர் அவற்றை விற்பதாக சந்தேகம் எழுந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், கோயிலுக்குள் தங்க முலாம் பூசும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ரகசிய அறையில் இருந்து தங்க நகைகளை கடத்தி அதற்கு பதிலாக போலி நகைகளை தங்க முலாம் பூசி அவற்றை இந்த ரகசிய அறையில் வைத்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் ஒரு நகரமாக இருந்தாலும் அந்த சமூகத்தில் இன்னும் மன்னர் ஆட்சி நடப்பது போலவே தோன்றுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கோயில் கணக்குகளை தணிக்கை செய்ய முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையிலான குழு நியமிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் நிர்வாக முறைகேடுகள் நடந்துவருவதாக வேதனை வெளியிட்டுள்ள அந்த அறிக்கை, கோவிலின் தினசரி செயற்பாடுகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தற்போதைய கோவில் அறங்காவலரும் அவரது குடும்பத்தினரும் தலையிடுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவேண்டும் என்று கோரியுள்ளது.

Check Also

கல்மண்டபம் அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவம் ஆரம்பம்…

11-03-2021 மஹாசிவராத்திரியினை முன்னிட்டு, இராயபுரம், கல்மண்டபம், ஆதம் தெருவில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன் திருக்கோயிலின் பிரம்மோற்சவம் விழா கோலாகலமாக தொடங்கியது. இதனையொட்டி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *