மூத்த கன்னட எழுத்தாளர், முன்னாள் துணை வேந்தர் கல்புர்கி சுட்டுக் கொலை – இந்துத்துவா அடிப்படைவாதிகளிடம் விசாரணை

சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான எம்.எம்.கல்புர்கி (77) கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்துத்துவா அடிப்படைவாதி களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எழுத்தாளரும் முற்போக்கு சிந்தனையாளருமான எம்.எம். கல்புர்கி கர்நாடக மாநிலம் பீஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள யரகல் கிராமத்தில் 1938-ம் ஆண்டு பிறந்தார். கன்னடத்தில் முதுகலை படிப்பை முடித்த இவர், 1966-ம் ஆண்டில் இருந்து பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். வசன இலக்கியத்திலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சிறந்து விளங்கிய அவர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு இவர் எழுதிய ‘மார்கா – 4′ (வழி – 4) என்ற ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

இதுமட்டுமில்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பயணித்து பல அரிய கல்வெட்டுகளை கண்டறிந்து ஆய்வு செய்தார். இதன் மூலம் கர்நாடக வரலாறு, க‌ன்னட இலக்கியத்தின் தொன்மை, பண் பாடு குறித்த தகவல்களை ஆதா ரங்களுடன் வெளிக்கொணர்ந்தார். கல்புர்கியின் சாதனைகளை பாராட்டி ‘பம்பா, ராணா, நிருப துங்கா’ உள்ளிட்ட உயரிய‌ விருது கள் வழங்கப்பட்டன. இறுதியாக, ஹம்பியில் உள்ள கன்னட பல் கலைக்கழகத்தில் துணைவேந்த ராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

மறைந்த ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் யு.ஆர். அனந்த மூர்த்தியின் நண்பரான கல்புர்கி தொடர்ந்து மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துகளைப் பேசி வந்தார். இதுமட்டுமில்லாமல் கர்நாடகாவில் மூடநம்பிக்கைக்கு எதிராக வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இதனால் பஜ்ரங் தளம், விஸ்வ ஹிந்து பரிஷத், ராம் சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டன. தார் வாட் மாவட்டம் கல்யாண் நகரில் உள்ள கல்புர்கியின் வீட்டின் முன்பாக திரண்ட இந்துத்துவா அடிப்படைவாதிகள் கல்வீசி தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்த‌னர்.

இந்நிலையில் நேற்று காலை 8.40 மணி அளவில் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கல்புர்கியின் வீட்டு கதவை தட்டியுள்ளனர். கல்புர்கியின் மனைவி கதவை திறந்தபோது, தாங்கள் பேராசிரியரின் பழைய மாணவர்கள், அவரை பார்க்க வந்திருப்பதாக தெரிவித்தன‌ர். இதனால் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த‌ கல்புர்கி வெளியே வந்து பார்த்தார். அப்போது ஒருவர் கல்புர்கியின் பக்கத்தில் வந்து, ஏதோ திட்டிவிட்டு அவரது நெற்றிக்கு அருகே துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து இருவரும் அங்கிருந்து பைக்கில் தப்பி ஓடியுள்ளன‌ர்.

சத்தம் கேட்டு மனைவி ஓடி வந்து பார்த்தபோது, கல்புர்கி ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். உடனடியாக தார்வாட் அரசு பொது மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது மனைவி, மகள் ரூபா தர்ஷி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் கல்புர்கியின் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தார்வாட் மாவட்ட காவல் ஆணையர் ரவீந்திர பிரசாத் கூறியபோது, “முதல்கட்ட விசாரணையில் கல்புர்கிக்கு மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தாக்குதலில் எத் தகைய துப்பாக்கி உபயோகிக்கப் பட்டுள்ளது, எத்தனை குண்டுகள் உடலை துளைத்திருக்கிறது என்பன உள்ளிட்ட விவரங்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும், கல்புர்கிக்கு அச் சுறுத்தலாக இருந்த இந்துத்துவா அடிப்படைவாதிகளிடம் விசாரணையை தொடங்கி இருக் கிறோம்” என்றார்.

கல்புர்கியின் கொலை தொடர் பாக அவரது மகள் ரூபா தர்ஷி கூறியபோது, “எனது தந்தைக்கு தனிப்பட்ட முறையில் எதிரிகள் யாரும் இல்லை. மூடநம்பிக் கைக்கு எதிராகவும், இந்துத்துவா அடிப்படைவாதிகளுக்கு எதிராக வும் அவர் தொடர்ந்து பேசியதால், ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. மூட நம்பிக்கைக்கு எதிராக பேசியதால் எனது தந்தை கொடூரமாக சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார் என சந்தேகப்படு கிறேன்” என தெரிவித்தார்.

முதல்வர் கண்டனம்

கல்புர்கி சுட்டுக் கொல்லப் பட்டதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ், மூத்த எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள னர். இது தொடர்பாக பஜ்ரங் தளம், விஸ்வ ஹிந்து பரிஷத், ராம் சேனா, ஹிந்து ஜகர்ன வேதிகே உள்ளிட்ட அமைப்புகளிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Check Also

காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் பேச்சு கண்டிக்கத்தக்கது: ஜி.கே.வாசன்

காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் நியாயமற்ற பேச்சு கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். …