மேற்கு இந்திய தீவுகளுடன் இனிவரும் ஆட்டங்களை நிறுத்த பிசிசிஐ முடிவு

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியுடன் இந்தியா எதிர்காலத்தில் விளையாடவிருந்த இருதரப்பு கிரிக்கெட் தொடர் போட்டிகள் அனைத்தையும் இடைநிறுத்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தீர்மானித்துள்ளது.

இந்தியாவில் விளையாடிவந்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி தொடரை பாதியிலேயே ரத்து செய்துவிட்டது சம்பந்தமாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பிசிசிஐ செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தீர்மானித்துள்ளனர்.

பார்வையாளர் அரங்க டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில், மூன்று டெஸ்ட் ஆட்டங்கள், ஒரு ஒரு நாள் ஆட்டம், ஒரு இருபது ஓவர் ஆட்டம் ஆகியவை ரத்தாக பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறும் பிசிசிஐ அதிர்ச்சியும் ஆத்திரமும் தெரிவித்திருந்தது.

தொடர் ரத்தானது சம்பந்தமாய் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்காக சக்திமிக்க பிசிசிஐ செயற்குழு செவ்வாயன்று கூடியது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இந்தியா விளையாடக்கூடிய கிரிக்கெட் தொடர்கள் அனைத்தையும் நிறுத்துவதாகவும், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதென்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தீர்மானித்திருப்பதாக பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல் அறிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் தொடரைப் பாதியிலேயே ரத்து செய்வதாக அறிவித்த நிலையில், குறைந்த கால அவகாசத்தில் இந்தியாவில் வந்து விளையாட சம்மதம் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ நன்றி தெரிவித்துள்ளது.

மேற்கிந்திய வீரர்களுடன் இந்திய அணித் தலைவர் தோனிமேற்கிந்திய வீரர்களுடன் இந்திய அணித் தலைவர் தோனி

நவம்பர் 2ஆம் தேதி தொடங்கி ஐந்து ஒருநாள் ஆட்டங்களை இலங்கை அணி இந்தியாவில் விளையாடவுள்ளது.

இந்த ஐந்து ஒருநாள் ஆட்டங்களுக்கான இடங்களாக கட்டாக், ஹைதராபாத், ராஞ்சி, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் தேர்வாகியுள்ளன.

போட்டியின் தேதிகளும் நேரமும் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

இதனிடையே, மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான கிரிக்கெட் தொடர்கள் நிறுத்தப்பட்டாலும், இந்திய பிரிமியர் லீக் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய வீரர்கள் பங்கேற்பது அனுமதிக்கப்படவே செய்யும் என ஐபிஎல் தலைவரான ரஞ்சிப் பிஸ்வால் தெளிவுபடுத்தியுள்ளார்.

Check Also

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *