தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அதிர்ச்சி!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தி பலியான 2 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது பிரபல ஆங்கில ஊடகமான என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். பொது மக்கள் வன்முறையில் ஈடுபட்டதால் தற்காப்புக்காக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே வழக்கில் திடீர் திருப்பமாக பலியானவர்களுக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது செய்தி ஏஜென்சி ஒன்றால் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேரின் உடலில் தலை அல்லது நெஞ்சுப் பகுதியில் குண்டு பாய்ந்து இருந்ததாகவும், அதில் பாதிக்கு பாதி பேர், பின்னாலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலை, என்டிடிவி வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்டதில் மிக இளம் வயதானவர் ஸ்னோவ்லின் என்ற மாணவி. 17 வயதான இந்த இளம் பெண்ணின் தலை வழியாக சென்ற குண்டு, வாய் வழியாக வெளியே வந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

கொல்லப்பட்ட 13 பேரில் 11 பேரின் குடும்பங்களை, ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் தொடர்பு கொண்டதாகவும், அதில் 10 குடும்பத்தினர் தாங்கள் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளதாகவும், ஒரு குடும்பத்தினர் மட்டும் வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டு சட்ட நடவடிக்கை குறித்து பேசி வருவதாகவும், நீதிக்காக போராட போவதாக தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

69 குண்டுகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், 30 எஸ்எல்ஆர் வகை துப்பாக்கியிலிருந்து வெளியாகியுள்ளதாகவும், 4 ரவுண்டுகள் .303 ரைஃபில்ஸ் மூலமாகவும், 12 ரவுண்டுகள் .410 வகை துப்பாக்கி மூலமாகவும் சுடப்பட்டதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.

கலவரம் நடைபெற்றால் எச்சரித்தும் அது கட்டுக்கடங்காமல் போனால், முதலில், முட்டிக்கு கீழ்தான் சுட வேண்டும் என்று காவல்துறை விதிமுறை கூறுகிறது. ஆனால், சுடப்பட்டதில் பெரும்பாலானோருக்கு நெஞ்சு, அல்லது தலையில் குண்டு பாய்ந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.