பா.ஜ.க. வேட்பாளர் கடத்தப்பட்டதாக பொய் தகவல் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மாநில தேர்தல் ஆணையம் கண்டனம்

பா.ஜ.க. வேட்பாளர் கடத்தப்பட்டதாக அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் பொய் தகவல் தெரிவித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ஜோதி நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

6-9-2014 அன்று மாலை பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில தேர்தல் ஆணையரை, மாநில தேர்தல் ஆணையத்தில் நேரில் சந்தித்து மனு அளித்து, பின்னர் ஒரு பத்திரிகைக்கு பேட்டியும் அளித்தபோது, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய 4-வது வார்டு வேட்பாளர் பிரபாகரன் என்பவர் கடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் முன்னிலையிலேயே விழுப்புரம் மாவட்ட கலெக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு மாவட்ட கலெக்டரின் விரிவான விசாரணை அறிக்கையை உடன் ஆணையத்திற்கு அனுப்புமாறு ஆணையிடப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) இதுகுறித்து விரிவான விசாரணை அறிக்கையை ஆணையத்திற்கு அனுப்பியுள்ளனர். அதில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் 4-வது வார்டு உறுப்பினர் தேர்தல் வேட்பாளர் பிரபாகரன் என்பவரை காணவில்லை என மேல்மலையனூர் காவல் நிலையத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த குமார் என்பவர் புகார் கொடுத்ததாகவும், காணாமல் போனதாக சொல்லப்பட்ட பிரபாகரனது குடும்பத்தினர் எவரும் இதுகுறித்து புகார் ஏதும் அளிக்கவில்லை எனவும், குமார் என்பவர் புகார் கொடுத்தது குறித்து தெரியவந்தவுடன் உடனடியாக காணாமல் போனதாக சொல்லப்பட்ட பிரபாகரன் தானே காவல் நிலையத்தில் ஆஜராகி தனது வீட்டில்தான் தாம் இருப்பதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், பா.ஜ.க.வினர் பொய்யான புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, அவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது பொய்யான தகவல் என்றும், பத்திரிகைகளில் வந்தது பொய் செய்தி எனவும் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் புகார் அளிக்கும் முன்பும், மாநில தேர்தல் ஆணையத்தில் மனுக்கள் கொடுக்கும் முன்பும், பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கும் போதும் சம்பந்தப்பட்ட செய்திகள் உண்மையா என விசாரித்து உண்மை நிலை அறிந்து அதற்கு பின்பு பொறுப் புடன் செயல்பட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது.

மாநில தேர்தல் ஆணையத்தில் கிடைக்கப்பெறும் எந்த ஒரு செய்திக்கும் ஆணையமானது உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு, அறிக்கையைப் பெற்று அதன் மீது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற தவறான செய்திகளால் மாநில தேர்தல் ஆணையத்தின் துரிதமான பணிகளில் இயற்கையான தடைகள் ஏற்படுகின்றன என்பதை மாநில தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. ஆணையத்தால் பெறப்படும் அனைத்து புகார்கள் மீதும் அவற்றின் உண்மை நிலை அறிந்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *