திமுகவின் பிரம்மாண்டமான 10வது மாநில மாநாடு – புகைப்படங்கள், திருச்சி

திருச்சி: திருச்சியில் திமுகவின் 10வது மாநில மாநாடு இன்று காலை தொடங்கியது. இம்மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்தும் பல லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் அருகே தி.மு.க.வின் 10- வது மாநில மாநாடு இன்று காலை தொடங்கியது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. அந்த திடல் லட்சக்கணக்கான தொண்டர்களால் நிரம்பி வழிகிறது.

இம் மாநாடு நடைபெறும் இடத்திற்கு அண்ணாநகர் என்றும் மாநாட்டு திடலுக்கு தந்தை பெரியார் பெயரும் சூட்டப்பட்டு உள்ளன. மாநாட்டு திடலின் பிரதான நுழைவு வாயிலுக்கு தா.கிருஷ்ணன் முன் முகப்பு என்றும், உள் முகப்பிற்கு திருச்சி முன்னாள் நகராட்சி தலைவர் மா.பாலகிருஷ்ணன், மாநாட்டு பந்தலுக்கு வீரபாண்டி ஆறுமுகம் பெயரும், பொற்செல்வி அரங்கம் என்றும், மாநாட்டு மேடைக்கு வாசுகி முருகேசன் பெயரும் சூட்டப்பட்டு உள்ளன. மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் இரவே திருச்சிக்கு வந்து விட்டார்.

நேற்று மாநாட்டு திடலுக்கு சென்று பார்வையிட்டார். பந்தலின் முகப்பில், தி.மு.க. கொடியை கருணாநிதி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது இளைஞர் அணியினர் மற்றும் மகளிர் தொண்டர் அணியினரின் அணிவகுப்பு மரியாதையை கருணாநிதி ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் தி.மு.க. பொது செயலாளர் அன்பழகன் மாநாட்டை திறந்து வைத்தார். அதன் பின்னர் மாநாட்டு பந்தலில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. படத்திறப்பு விழா காலை 11 மணிக்கு மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வரவேற்று பேசினார்.

அதன் பின்னர் படத் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தை பெரியார் படத்தை திமுக வெளியீட்டு செயலாளர் செல்வேந்திரனும், அண்ணா உருவபடத்தை திருச்சி சிவா எம்.பி.யும், சர்.பிட்டி தியாகராயர் படத்தை சபாபதி மோகனும், டி.எம்.நாயர் படத்தை கோவை மு.ராமநாதனும், டாக்டர் நடேசனார் படத்தை ஆலந்தூர் பாரதியும், புரட்சி கவிஞர் பாரதிதாசன் படத்தை கவிதை பித்தனும், மூவாலூர் மூதாட்டியார் படத்தை சுப்புலட்சுமி ஜெகதீசனும், சத்தியவாணிமுத்து படத்தை நூர்ஜகான்பேகமும், மொழிப்போர் தியாகிகள் உருவபடத்தை பொன்முடியும் திறந்து வைத்து உரையாற்றினர். மாலையில் பல்வேறு தலைப்புகளில் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பேசுகின்றனர். இரவு 8 மணிக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சிறப்புரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு நாடகம் நடைபெறும். இத்துடன் முதல் நாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *