இடைக்கால ரெயில்வே பட்ஜெட் தாக்கல்,தமிழ்நாட்டுக்கு 9 புதிய ரெயில்கள் அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தாக்கல் செய்தார். மக்களவையில் கடும் அமளிக்கிடையே இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நடப்பு நாடாளுமன்றத்தில் கடைசி பட்ஜெட்டை மல்லிகார்ஜூன கார்கே தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர் தேசிய ஒருமைப்பாட்டிற்கு ரயில்வேயின் பங்கு அளப்பரியதாகும் என்று குறிப்பிட்டார். 2758 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரட்டை பாதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இலக்கைவிட 258 கி.மீ தொலைவு இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தமிழகத்திற்கு 9 புதிய ரயில்கள்:

1. சென்னை-பெங்களூரு – மேலும் ஒரு ரயில் சேவை அறிமுகம்

2. மன்னார்குடி-ஜோத்பூர் – புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3. மும்பை-சென்னை – குல்பர்கா வழியாக புதிய வாராந்திர ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

4. நாகர்கோவில்-கச்சிகுடா – புதிய ரயில் கரூர், சேலம் வழியாக இயக்கப்படும் என்று அமைச்சர் கார்கே அறிவித்துள்ளார்.

5. மன்னார்குடி-மயிலாடுதுறை – புதிதாக தினசரி பயணிகள் ரயில் சேவையும் துவங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

6. திருச்செந்தூர்-நெல்லை – புதிதாக பயணிகள் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,

7.  திருவனந்தபுரம்-பெங்களூரு – ஈரோடு, திருப்பத்தூர் வழியாக புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். இந்த சேவை வாரம் இருமுறை வழங்கப்படும்.

8. சென்னை-காமாக்கியா(அசாம்) – வாராந்திர ரயில் சேவை

9. புனலூர்-குமரி – தினசரி பயணிகள் ரயில் சேவை வழங்கப்படும். இந்த ரயில் சேவை கொல்லம், திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரிக்கு இயக்கப்படும்.

ரயில் கட்டண உயர்வு இல்லை:

இடைக்கால பட்ஜெட் என்பதாலும், பாராளுமன்ற தேர்தல் வருவதாலும் பயணிகளை பாதிக்கும் வகையில் ரெயில் பயண கட்டண உயர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு பதில் அதிவேகம் கொண்ட ரெயில்களை அறிமுகம் செய்யப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயா முதன்முதலாக ரெயில் போக்குவரத்து பெற உள்ளது. அந்த மாநிலத்துக்கும் அருணாசல பிரதேச மாநிலத்துக்கும் இடையே புதிய ரெயில் பாதை போடப்படும்.

45566 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதை மின்மயம் ஆக்கப்பட்டுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட 56 கி.மீ. தூரம் அதிகமாகும்.

ரெயில்வேயில் 6–வது நிதிக்கமிஷன் பரிந்துரைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் சரக்கு போக்குவரத்துக்கு தனி ரெயில் பாதை போடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ரெயிலின் பயண நேரம் பாதியாக குறைந்துள்ளது.

ரெயில் நில மேம்பாட்டு ஆணையம் மூலம் ரெயில்வேக்கு இதுவரை ரூ.937 கோடி கிடைத்துள்ளது. எனவே நடப்பு நிதியாண்டில் ரெயில் வருவாய் உபரியாக இருக்கும். எனவே பட்ஜெட்டில் பற்றாக்குறை இல்லை.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *