குவைத் புதிய சட்டம் : வேலை இழக்கும் அபாயத்தில் 8 இலட்சம் இந்தியர்கள்….

மத்திய கிழ‌க்கு நாடான குவைத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களைக் குறைக்க வழிவகை செய்யும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது சட்டமாக வடிவம் பெற அரசின் அனுமதி தேவை.

இந்த மசோதா சட்ட வடிவம் பெற்று நிறைவேறும்பட்சத்தில் இந்தியர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள்.

குவைத்தின் பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது. உள்ளூர் மக்களே வேலை வாய்ப்பில்லாமல் பரிதவிக்கிறார்கள். இதன் காரணமாகவே இப்படியான சட்டம் நிறைவேற்றப்படுவதாகக் கூறுகின்றனர் வல்லுநர்கள்.

அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பணியாளர்களால் ஒரு சமநிலையற்ற நிலை குவைத்தில் நிலவுகிறது. எதிர்காலத்தில் இது பெரிய சவாலாக இருக்கப் போகிறது என்று குவைத் பிரதமர் ஷேக் சபா கூறியதாக குவைத் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியர்கள் மட்டுமல்ல, குவைத்தில் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள், பிலிப்பைன்ஸ் மக்கள், வங்கதேச மக்கள், எகிப்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் இதன் காரணமாகப் பேரிழப்பைச் சந்திக்கப் போகிறார்கள்.

இது தொடர்பாக குவைத் அரசுடன் முன்பே பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறது இந்திய அரசு.

பிற அரபு தேசங்களைவிட குவைத்தில் இந்தியச் சமூகம் நன்கு அங்கீகரிக்கப்பட்டார்கள், மதிக்கப்பட்டார்கள். நாம் நமது எதிர்பார்ப்பைச் சொல்லிவிட்டோம். நமது கருத்தையும் எடுத்துக் கொண்டே இந்த சட்டம் தொடர்பாக குவைத் ஒரு முடிவுக்கு வரும் என்கிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர்.

இந்தியாவின் அந்நிய செலவாணியில் குவைத் பெரும்பங்கு வகிக்கிறது.

ஏறத்தாழ் 3 லட்சம் இந்தியர்கள் ஓட்டுநர்களாக, சமையற் கலைஞர்களாக, வீட்டை பராமரிப்பவர்களாக குவைத்தில் வசிக்கிறார்கள்.

ஒருவேளை இவர்களை பணிநீக்கம் செய்யும்பட்சத்தில் உள்ளூர் மக்களைக் கொண்டு இந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது என்கின்றனர் சிலர்.

குவைத்தின் பொருளாதாரம் அதிகமாக எண்ணெய் வளத்தைச் சார்ந்து இருக்கிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய்யின் வீழ்ச்சிதான் இவ்வாறாகப் பிரதிபலிக்கிறது.

இனி என்ன நடக்கும்? என்று வரும் நாட்களில் தெரிய வரும் என்கின்றனர் வல்லுனர்கள்.

Check Also

ஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. சவுதி …