அனைத்து குடிமக்களின் உரிமையையும் புதிய அரசு பாதுகாக்கும் – குடியரசுத் தலைவர் உரை

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் இன்று காலை துவங்கியது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.

அப்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மக்களவைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள சுமித்ரா மகாஜனுக்கும் குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நடந்து முடிந்துள்ள தேர்தல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை உறுதி செய்கிறது. நிலையான அரசு அமைய வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். சிறப்பான முறையில் தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு எனது பாராட்டுகள்.

அனைத்து வாக்குறுதிகளையும் புதிய அரசு திறம்பட செய்து முடிக்கும்.  வறுமையைக் குறைப்பதை இலக்காக கொண்டு மத்தியில் அமைந்துள்ள அரசு செயல்படும். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யும். வேளாண்மைத் துறையில் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்:

  • பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு முக்கியத்துவம் அளிக்கும்.
  • பாஜக அரசின் தாரக மந்திரம் ‘சிறிய அரசாங்கம் செம்மையான அரசாட்சி’ என்பதாக இருக்கும்.
  • பொது விநியோகத் திட்டத்தில் மறு சீரமைப்பு கொண்டு வரப்படும்.
  • வறுமையை குறைப்பதை இலக்காகக் கொண்டு புதிய அரசு செயல்படும்.
  • அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில் அரசின் செயல்பாடு இருக்கும்.
  • இந்திய எல்லையில் ஊடுருவலை தடுக்க அரசு முன்னுரிமை வழங்கும்.
  • உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அனைத்து மாநிலங்களிலும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
  • அனைவருக்கும் சுத்தமான தண்ணீர் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்.
  • ஆந்திரா, தெலுங்கானா மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு வேண்டிய உதவிகளை செய்யும்.
  • விளையாட்டுத் துறை ஊக்குவிக்கப்படும். தேசிய விளையாட்டு திறன் கண்டறியும் மையம் அமைக்கப்படும்.
  • பெண்களுக்கு எதிரான வன்முறையை அரசு பொறுத்துக் கொள்ளாது. பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் விரைவாக நீதி கிடைக்க அரசு வழிவகை செய்யும்.
  • மக்கள் உடல்நலத்தை பேணும் வகையில் தேசிய காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
  • அனைத்து சிறுபான்மை சமுதாயத்தினரையும் அரசு சரிசமமாக நடத்தும்.
  • கிராமங்களில் குடிநீர், மின்சார பற்றாக்குறை சரி செய்யப்படும்
  • மதரஸாக்களை நவீனப்படுத்தும் திட்டத்தை அரசு மேற்கொள்ளும்.
  • பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் ‘சார்க்’ கூட்டமைப்பு நாடுகளுடனான நல்லுறவு மேலும் பலப்படுத்தப்படும்.
  • நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கடினமான சவாலை எதிர்கொண்டிருக்கிறது. இந்நிலையில், பொருளாதாரத்தை சீர் படுத்துவதே அரசாங்கத்தின் முன் இருக்கும் மிகப் பெரிய கடமை.
  • நாட்டில் ஊழல் ஒழிக்கப்படும். வெளிநாடுகளில் முடங்கிக் கிடக்கும் கறுப்புப் பணம் மீட்டுக் கொண்டு வரப்படும்.
  • அதிவேக விரைவு ரயில் திட்டத்தை மேம்படுத்த ‘வைர நாற்கரம்’ திட்டம் செயல்படுத்தப்படும்.
  • சிறிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் சிறிய ரக விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
  • அந்நிய முதலீட்டை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
  • பாதுகாப்புத் துறையில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும்.
  • அணுமின் நிலைய திட்டங்கள் மேம்படுத்தப்படும்.
  • ஜப்பான், சீனாவுடனான நட்புறவு வலுப்படுத்தப்படும்.
  • வேளாண் துறையில் முதலீடு அதிகரிக்கப்படும்.
  • சிறு துளி நீரும் பெரும் மதிப்படையது. நீர் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதான் மந்திரி கிரிஷி சஞ்சாய் யோஜனா செயல்படும்.
  • இளைஞர்களுக்காக ஆன்லைன் படிப்புகள், வகுப்பறை அமைக்கப்படும்.
  • நீதித்துறை மேம்பாட்டிற்காக நீதிமன்றங்களை மேம்படுத்தும் திட்டத்தை அரசு மேற்கொள்ளும்.
  • தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிகை எடுக்கப்படும்.
  • கங்கை நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
  • நிலக்கரி, கனிமங்கள், அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு தெளிவான நெறிமுறைகளை அரசு வகுக்கும்.
  • மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சீரமைக்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இளைஞர்களுக்கு வேலை தொடர்பான ஆலோசனையும், பயிற்சியும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
  • தேசிய எரிசக்தி கொள்கை உருவாக்கப்படும். மரபுசாரா எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகள் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • தீவிரவாதம், வன்முறை, கலவரங்கள், போதைப் பொருள் கடத்தல், சைபர் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.
  • கடலோர பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை அரசாங்கம் உணர்ந்திருப்பதால் தேசிய கடல்சார் ஆணையம் அமைக்கப்படும்.
  • ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்படும்.
  • போரில் உயிர் துறந்த வீரர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *