அமெரிக்காவில் தொலைக்காட்சி நேரலையின்போது நிருபர், ஒளிப்பதிவாளர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது புகுந்த மர்ம நபர் அங்கிருந்த நிருபர், ஒளிப்பதிவாளரை சுட்டுக் கொன்றார்.

இந்தப் படுகொலைக் காட்சி நேரலையில் ஒளிபரப்பாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் துரத்தியதை அடுத்து அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தார்.

அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரவோனாகேவில் டபிள்யுடிபிஜே7 (WDBJ7 )என்ற செய்தி சானல் இயங்குகிறது. இங்கு பணியாற்றி வந்த ஆலிசன் பார்க்கர்(24), ஒளிப்பதிவாளர் ஆடம் வார்ட்(27) ஆகியோர் நேற்று புதன்கிழமை காலை நேலை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது நிகழ்ச்சி நடக்கும் தளத்துக்கு வந்த வெஸ்டர் பிளானகன்(41) என்பவர் அங்கிருந்தவர்களை பார்த்து புன்னகையித்து பின்னர் தனது துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார்.

நிருபரும், பேட்டி கொடுப்பவரும் அலறிய சப்தத்தையும், எட்டு முறை துப்பாக்கி வெடிக்கும் சப்தத்தையும், அதைத் தொடர்ந்து கேமரா கீழே விழும் காட்சியும் நேரலையாக ஒளிபரப்பானது.

இதில் ஆலிசன் பார்க்கர் மற்றும் ஆடம் வார்ட் கொல்லப்பட்டனர். தொடர் துப்பாக்கிச்சூட்டால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்திருந்த பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரபரப்பானச் சூழலில் அங்கிருந்து தப்பித்த பிளானகன் வெர்ஜினியா போலீஸார் துரத்த அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அப்போது ஏபிசி என்ற மற்றொரு செய்திச் சானலை தொடர்புகொண்ட அவர், தான் 2 பேரை சுட்டுக் கொன்றதாகவும் போலீஸார் தன்னை துரத்துவதாகவும் தெரிவித்துவிட்டு, தொடர்பை துண்டித்தார். போலீஸார் பிளானகனை நெருங்கியபோது அவர்களிடமிருந்து தப்பிக்க அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.

பிளானகன் இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னதாக ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு 23 பக்கங்கள் கொண்ட ஃபேக்ஸையும் அனுப்பினார். அதில் தான் ஒரு மனித வெடிகுண்டு என்றும் வெடிக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுருந்ததாக வெர்ஜினியா போலீஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடந்த பின் சுமார் 90 நிமிடங்கள் கழித்து பிளானகனிடமிருந்து மீண்டும் ஏபிசி நிறுவனத்துக்கு அந்த அழைப்பு வந்ததாக தொலைக்காட்சி ஆசிரியர் கூறினார்.

வெஸ்டர் பிளானகன் இந்த செயலுக்கு பின்னணியில் நிறவேறுபாடு, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பணியில் ஏற்பட்ட இடையூறு என்பதாக காரணங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக டபிள்யுடிபிஜே7 செய்தி சானலில் நிருபராக பணியாற்றினார். அப்போது ஆலிசன் பார்க்கர் மற்றும் ஆடம் வார்ட் அவரிடம் நிறவேறுபாடு காட்டியதாகவும் இதனை அவர் எதிர்த்து வாக்குவாதம் நடத்திய நிலையில், அவர் சானலில் சில மாதங்களுக்கு பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பணிநீக்கத்துக்கான காரணத்தை நிறுவனம் பிளானகனிடம் குறிப்பிடவில்லை.

Check Also

அமெரிக்காவில் சீக்கியர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் சீக்கியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிகாகோ நகரைச் சேர்ந்தவர் இந்தர்ஜித் சிங் முக்கர். சீக்கியரான …