ஆசிரியர் தினம் – பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டெல்லி மானக்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் உருவம் பொறித்த நாணயத்தை பிரதமர் மோடி இன்று காலை வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக மாணவர்களை கலையில் ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பு இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சி என்றும், இளமை பருவத்தில் ஆசிரியர்கள் கற்பித்தது நமது நினைவில் என்றும் இருக்கும் எனவும் கூறினார்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையை நெறிப்படுத்துபவர்கள் ஆசிரியர்களே என்றும், உண்மையான ஆசிரியர்களுக்கு என்றுமே ஓய்வு கிடையாது எனவும் ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

திறமைமிக்க மாணவர்களை ஆசிரியர்கள் வெளிக்கொணர வேண்டும்
எனக் கேட்டுக்கொண்ட பிரதமர், மாணவர்களின் திறமைகள் குறித்து ஆசிரியர்கள் வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

முதல்வர் ஜெயலலிதா

ஆசிரியர் பெருமக்களின் சேவை மென்மேலும் சிறக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுவதாக கூறியுள்ளார்.

அறியாமை என்ற இருளை நீக்கி, அறிவுக்கண்ணை திறந்திடும் மகத்தான மனிதவள மேம்பாட்டுப் பணியினை ஆற்றி வரும் ஆசிரியப் பெருமக்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் நல்லாசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருவதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் எதிர்கால தூண்களான மாணவச் செல்வங்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியையும் கற்பித்து, தேசத்தின் விலை மதிப்பில்லாச் செல்வங்களாக உருவாக்கிடும் உயரிய பணியினை ஆற்றிடும் ஆசிரியர் பெருமக்களின் சேவை மென்மேலும் சிறக்க வேண்டுமென ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Check Also

முதல்வர் படத்தை சுவரில் மாட்டி கொரோனாவில் இருந்து பாதுகாக்க குமரிமாவட்ட முதன்மை சார்பதிவாளர் சுற்றறிக்கை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதன்மையானது முதல்வர் படத்தை அலுவலர் இருக்கைக்கு பின் உள்ள சுவரில் மாட்டவேண்டும் குமரிமாவட்ட முதன்மை சார்பதிவாளர் …