உதிர்ந்து போன அக்னி சிறகுகளின் உதிராத உணர்வுகள்

“ மரணம் என்பது என்னை எப்பொழுதுமே அச்சுறுத்தியதில்லை, எல்லோரும் ஒருநாள் போய்ச்சேர வேண்டியவர்கள்தான் என்று சொன்னதோடு மட்டுமின்றி மரணத்தை மனமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு மக்களிடம் இருந்து பிரியா விடைபெற்று சென்றிருக்கிறார் ஆவுல் பக்கீர் ஜெயினுலாபூதின் அப்துல் கலாம் அவர்கள்”

“இளைஞர்களே! இந்தியாவை பற்றி கனவு காணுங்கள்’’ எனும் தாரக மந்திரம் பூட்டி கிடந்த, இருளடைந்து போன பல இளைஞர்களின் இதயக்கதவுகளை “சுயமுன்னேற்றம்” எனும் திறவுகோலால் திறக்கப்பட்ட மந்திரச்சாவி, கடற்கரை ஓரத்தில் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்திய தேசத்தின் 11வது குடியரசு தலைவராக, தலைகுடிமகனாக பணியாற்றிய அல்ல.. சேவை புரிந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து பெருமைக்குரிய பெருமகனார்.

தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள இராமேஸ்வரத்தில், ஒரு ஏழை படகோட்டியின் மகனாக பிறந்து, சைக்கிளில் வீடு வீடாக சென்று செய்தித்தாள் போட்ட ஒரு கடின உழைப்பாளியின் உயர்வு, விடாமுயற்சி ஏழைகளாலும் சாதித்து உயர்பதவிகளில் அமர முடியும் என்பதை தனது உழைப்பால் உலகிற்கு உரத்துச் சொன்ன உயர் பண்பாளர்.

இந்திய அரசியலில் உயர் பதவிகளில் பொறுப்பு வகித்தும் சுத்தமான, அப்பழுக்கற்ற கரங்களுக்கு சொந்தக்காரர் எனும் பேறுபெற்ற இந்திய தேசத்து மக்களின் மனங்களில் வாழும் பெருமைக்குரியவர்.

எத்தனைய உயர் பதவிகளில் இருந்தும் கைநீட்டி குற்றம் சொல்ல முடியாத குற்றமற்ற, கரைகளுக்கு அப்பாற்பட்ட அறிவியல் விஞ்ஞானி. இந்திய தேசத்தின் முதல் குடிமகன் எனும் பேறுபெற்றாலும், குழந்தைகளிடமும், மாணவர்களிடமும் சுமூகமாக பழகி ‘உங்களாலும் உயர முடியும் எனும் தன்னம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துவிட்டு சென்றதால், மாணவ சமுதாயம் கண்கலங்கி நிற்கிறது.

ஒரு தேசத்தின் குடியரசுத்தலைவர் வாழ்ந்த இல்லமும் கூட எளிமையின் பாடமாய் திகழ்கிறது. போலீயோ நோயால் பாதிக்கப்பட்டவர்களும் குறைந்த கனத்தில் உலோக கருவிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு “பேஸ் மேக்கர்” போன்ற கருவிகளை உருவாக்கியுள்ளார்.

நமது நாடு ஏழ்மையானது அல்ல.. நமது எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும். அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அதன் மூலம் சாதனைகள் படைக்க முடியும். நாடு சுயச்சார்பு அடைய அறிவியல் அறிஞர்களும், இளைய தலைமுறையினரும் அயராது உழைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தவர் கலாம்.

இந்தியாவை 2020 க்குள் வல்லரசாக மாற்ற வேண்டும் என்ற அப்துல் கலாமின் ஆசைகளும், ஒட்டுமொத்த இந்திய தேசத்து மாந்தரின் மனங்களில் உறைந்து, உணர்விழந்து கிடக்கும் கனவுகளை நிஜமாக்க அரசியல் தலைவர்களும், மாணவ சமூகமும், அறிஞர்களும் அறிவு சிந்தனையோடு களமிறங்குவதற்கான தேதி குறிக்கப்பட்டு விட்டது.

Abdul-Kalam-2உங்கள் குறிக்கோளில் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்கள் இலக்கில் இம்மியும் பிசகாமல் குறிவைத்து அதீத சிந்தனையுடன் செயல்பட வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது, நாம் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி என்ற ஐயா அப்துல் கலாமின் போதனைகளோடு நாம் உயர நம்மை நாமே நாம் தயார்படுத்த வேண்டும்.

இளைய சமூகமே! ‘வாருங்கள் கலாமின் கனவுகளை நிஜமாக்குவோம்’’ என்ற வைர வரிகளுக்கு புத்துயிர் கொடுக்க தயாராகுங்கள். மொத்தத்தில், ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர் மட்டுமல்ல.. மனிதர்களுக்கும், தேசத்திற்கும் பாடமாய் வாழ்ந்து காட்டி சென்றிருக்கிறார்.

உதிர்ந்துபோன அந்த அக்னி சிறகுகளின் உறையாத உறவுகள் நம் உணர்வுகளில் உதிரங்களில் என்றென்றும் நிலைக்கட்டும்.

மு.ஃபக்கீர் இஸ்மாயில்.

Check Also

9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற முதல்வரின் அறிவிப்பிற்கு கண்டனம்…

தமிழகத்தில் 9,10 மற்றும் 11 ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவித்துள்ள தமிழக முதல்வர் அவர்களின் …