உலக தடகள சாம்பியன் போட்டிகள் பீஜிங்கில் நாளை துவக்கம்

மிகப் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உலகத் தடகளச் சாம்பியன் போட்டிகள் சனிக்கிழமை சீனத் தலைநகர் பீஜிங்கில் தொடங்குகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்ற போதிலும், இந்த ஆண்டு கூடுதல் பரபரப்பும் எதிர்பார்ப்புகளும் உள்ளன.

உலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை ஜமைக்காவின் உசைன் போல்ட் தக்கவைத்துக் கொள்வாரா அல்லது ஊக்க மருந்து பயன்படுத்தி, பரிசோதனையில் சிக்கி தடை விதிக்கப்பட்டிருந்த காலத்துக்கு பின்னர் மீண்டு வந்துள்ள அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் அவரை வெற்றி கொள்வாரா என்ற பரபரப்புக் கேள்வி ரசிகர்களிடையே உள்ளது.

அத்தோடு, தடகள விளையாட்டில் ஊக்க மருந்து பயன்பாடு தலைவிரித்து ஆடுகிறது, அதை சர்வதேச தடகளச் சம்மேளனம் கண்டும் காணாமல் இருந்துள்ளது என்று எழுந்துள்ள குற்றச்சாட்டின் பின்னணியில், இந்தப் போட்டியில் யாரும் அப்படியான தவறான வழிமுறைகளில் ஈடுபடமாட்டார்கள் என்ற உத்திரவாதம் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தப் போட்டியில் பங்குபெறுவதற்கு ஏற்கனவே பதிவு செய்திருந்த பல முன்னணி வீரர்கள் அதிலிருந்து பின்வாங்கியுள்ளது குறித்து பல வதந்திகளும் உலவுகின்றன.

பீஜிங் நகரில், போட்டிகள் நடைபெறவுள்ள பறவைக் கூடு விளையாட்டு அரங்கு உசைன் போல்ட்டை உலகுக்கு அடையாளம் காட்டிய இடமாகும். சரியாக எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே அரங்கில்தான் அவர் தனது முதல் ஒல்ம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றார்.

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. கடந்த சில மாதங்களாக அவரது ஆளுமைக்கு சவால்கள் அதிகரித்துள்ளன.

ஜஸ்டின் காட்லின், டைசன் கே, அசாஃபா பவல், யொஹான் பிளேக், நெஸ்ட்டா கார்ட்டர், போன்ற பலர் 100 மீட்டர் தூரத்தை 10 நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் ஓடியுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு தென் கொரியாவின் டேகு நகரில் நடைபெற்ற உலகத் தடகளப் போட்டியில், ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் உலகச் சாம்பியன் உசைன் போல்ட், துப்பாக்கி குண்டு சுடப்படுவதற்கு முன்பே ஓடத் தொடங்கியதால், போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இம்முறை போட்டிகளில் இந்தியாவின் சார்பில் ஆடவர் பிரிவில் 7 பேரும், மகளிர் சார்பில் 11 பேரும் பங்கேற்கின்றனர்.

உசைன் போல்ட்டின் 100 மீட்டர் சாதனை நேரம் 9.58 நொடிகள். பெர்லின் ஒலிம்பிக் மைதானத்தில் 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி அந்தச் சாதனையை அவர் படைத்திருந்தார்.

மகளிர் பிரிவில் வேகமான மங்கை எனும் பட்டத்தை பெற்றுள்ளவர் அமெரிக்காவின் மரியன் ஜோன்ஸ். அவர் 100 மீட்டரை 10.7 நொடிகளில் ஸ்பெயினின் செவில் நகரில் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி ஓடியிருந்தார்.

நாளை தொடங்கும் இந்தப் போட்டிகள் இம்மாதம் 30ஆம் தேதிவரை நடைபெறுகிறன.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …