ஒடிசா அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகள் உயிரிழப்பு

ஒடிசா மாநில தலைநகர் கட்டாக்கில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு மருத்துவமனையில், நேற்று ஒரே நாளில் 7 குழந்தைகள் உயிரிழந்தன.

இதன் காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த உறவினர்கள், குழந்தைகள் சிகிச்சை மைய வளாகத்தை பூட்டி, நேற்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் போதிய மருத்துவர்கள் இல்லாததே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் என தற்போது தெரிய வந்துள்ளது. 50 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 20 மருத்துவர்கள் பணியாற்றுவதால் குழந்தைகள் சரிவர கவனிக்க முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், பிற மருத்துவமனைகளில் இருந்து, கூடுதல் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த, 4 பேர் கொண்ட குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.