காங்கிரஸில் இருந்து ஜி.கே. வாசன் நீக்கம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே. வாசனை நீக்கி அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்தத் தகவலை டில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசியபோது அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் குமார் உறுதிப்படுத்தினார். அவர் மேலும் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் புதிய கட்சியை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் சென்னையில் செய்தியாளர்களுக்கு ஜி.கே. வாசன் திங்கள்கிழமை பேட்டியளித்துள்ளார். அப்போது காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இதையடுத்து, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

இதற்கிடையே, காங்கிரஸ் மேலிட நடவடிக்கை குறித்து ஜி.கே. வாசனிடம் கேட்டதற்கு “என்னை நீக்கும் முன்பே காங்கிரஸிலிருந்து விலகிவிட்டேன்’ என்று தெரிவித்தார்.

 இதுகுறித்து தமிழக காங்கிரஸூக்கான மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்ததாவது:

வாசன் வெளியேற்றத்தால் காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிலைகளிலும் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். காங்கிரஸ் கட்சி பேரியக்கமாகும். வாசன் வெளியேற்றத்தால் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எவ்விதப் பாதிப்பும் நேராது. இனி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் கூட்டங்கள் போன்ற பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

 கட்சியில் இருந்து விலக முடிவெடுக்கும் முன்பு, தமது மனக் குறைகளை அவர் மேலிடத்திடம் உரிய முறையில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. வாசன் தரப்பில் இருந்து எவ்விதக் கடிதமும் மேலிடத்துக்கு வரவில்லை. அதனால்தான், அவரை கட்சி விதிகளின்படி ஆறு ஆண்டுகளுக்கு வெளியேற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து கட்சியில் இருந்து விலகப் போவதாக அறிவித்தவர்கள் மீதான நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறோம் என்றார் அவர்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published.