செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு… அச்சத்தில் மக்கள்…

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் பகுதியில், மணிகண்டபுரம் சீனிவாசன் நகர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த ஒரு வார காலமாக மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.

பல வருடங்களாக பராமரிப்பு இல்லாத நிலையில், சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீரும் இதில் கலந்து வருகிறது. இதனால் நோய் தொற்று அபாயத்தில் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குடியிருப்பு நலசங்கங்கள் சார்பாக ஆவடி மாநகராட்சி ஆணையரிடமும், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பால்வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு திரு. மு. நாசர் அவர்களிடமும் நேரில் மனு அளித்து இதனை சீர் செய்து தரும்படி வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இந்நிலையில் சில நாட்களாக பருவமழை பெய்து வருவதால், ஏரி மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்து, நோய் தொற்றும் அபாயத்திலிருந்து  காக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவு, செய்தியாக்கம்:
ச. பாக்கியராஜ்