சென்னையில் குடிநீர் பஞ்சம்? கோடையை எப்படி சமாளிக்க போகிறார்கள் மக்கள்? ஜீனியஸ் பார்வை

பருவ மழை சரியான அளவு பொழியாத காரணத்தினால் குடிநீர் பஞ்சம் மெதுவாக தமிழகம் முழுவதும் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது

இந்நிலையில் சென்னையை பொறுத்த வரை ஒரளவுக்கு வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீர்வரத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் மனம் தளராமல், குடிநீர்வாரிய உயர் அதிகாரிகள் ஆந்திரா சென்று பேசி பார்த்தும் பயனில்லாமல் வாடிய முகத்துடன் திரும்பி வந்தனர். இருந்தாலும் சமாளிப்போம் என புரூடா விட்டு, மே மாதம் வரை சமாளிக்க முடியும் என சொன்னது முழு பூசணியை நீரே இல்லாத இடத்தில் மறைத்த கதையாகியுள்ளதாக தெரிகிறது.

சென்னை நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் அனைத்தும் இப்போதே பாலைவனமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் பெற்றாலும் அஙகேயும் வறட்சி. இதனால் சென்னையை சுற்றியுள்ள கல்குவாரிகளிலிருந்தும், கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்தும் நீரைப் பெற்று சமாளிக்க குடிநீர் வாரியம் திணறித்தான் வருகிறது.

தேர்தல் நேரம் என்பதால் மக்கள் அதிருப்தியடையக் கூடாது என்பதற்காக வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் குடிநீர் நேரத்தை மாற்றியுள்ளனர். தேர்தல் முடியும் வரை மக்கள் கோபப்படாமல் இருப்பதற்கு தெருக்களில் குடிநீர் தாராளமாக கிடைக்க மேலிடத்தில் இருந்து உத்தரவு போடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதனைால் வீடுகளுக்கு வரும் குடிநீர் சப்ளையை விட தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள தெருக் குழாய்களில் குடிநீர் தாராளமாக சப்ளையாகிறது.
இதற்கிடையே குழாய் மூலமாக வீடுகளுக்கு சப்ளையாகும் நீரில், கழிவு நீரும் கலந்து வருவதாக நகரின் பல பகுதிகளில் மக்கள் குமுறுகின்றனர். குடிநீர் மற்றும் கழிவு நீர் வரியினை மட்டும் கறாராக வசூல் செய்யும் குடிநீர் வாரியம் இத்தகைய நேரங்களில் மெத்தனமாகவே செயல்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு என்ன காரணம் என ஆராய்கையில், ஆரம்ப கால கட்டங்களில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் குடிநீர் வாரிய முழு நேர ஊழியர்களாக பணியாற்றிய போது அந்தந்தப் பகுதிகளில் உள்ள பாதிப்பினை புரிந்துக் கொண்டு அதனை சரி செய்தனர். வாரியத்தில் சம்பளம் பெற்றாலும் பழுது பார்க்கும் இடத்தில் தனியே ‘கட்டிங்’ பெற்றும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று வாரிய அதிகாரிகள் மட்டத்தை தவிர கடைநிலை ஊழியம் என்பது ஒப்பந்தக்காரர்களிடம் தஞ்சம் அடைந்துள்ளது. ஒப்பந்தத்தை எடுக்கும் நபர்கள், மொத்த ஒப்பந்தத் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் அதிகாரிகளுக்கு தர வேண்டிய சூழலில் பணியில் மெத்தனப் போக்காக நடந்து கொள்கிறார்கள். இவர்களுடன் இதனை மேற்பார்வையிட்டு தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகள் அடங்கியிருப்பதுதான் ஹைலைட்..

இத்தகைய சூழலில் சென்னை நகர மக்களுக்கு குழாய் மூலமாக குடிநீர் தர முடியாத பகுதிகளுக்கு லாரிகள் மூலமாக சப்ளை செய்யப்படுகிறது. இதுவும் ஒப்பந்தத்தில் ஓட்டப்படுகிறது இதிலேயும் பசையுள்ள ஆசாமிகள் சம்பாதிப்பது வேறு ரூட்..

இந்த நிலையில் குடிநீர் வேண்டுமெனில் ஆன்லைன் மூலமாகத்தான் பதிவு செய்ய வேண்டும் அப்புறம்தான் அவர்களுக்கு சப்ளை கிடைக்கும். கடந்த சில நாட்களாக சென்னையை சுற்றியுள்ள குடிநீரேற்று நிலையம் மூலமாக குடிநீர் சப்ளை என்பது பதிவு செய்த பின் ஐந்து நாட்களுக்கு பிறகே கிடைக்கிறது என்பதுதான் சோகம்.

இதனை பயன்படுத்தி கேன் குடிநீர் சப்ளை செய்பவர்களின் நிலை குஷியாகி விட்டது. அந்த நீரும் சுத்திகரிக்கபபட்ட குடிநீரா என கேட்க முடியாத நிலையில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக நம்மை பயமுறுத்திய மழையினால் கிடைத்த நீரையெல்லாம் சேமித்து வைக்காமல் கடலுக்கு அனுப்பி விட்டு, ஆக்கிரமிப்பு செய்த இடங்கள் எல்லாம் அகற்றப்படாமல், தூர் வார வேண்டிய இடங்கள் பற்றியும் கொஞ்சமும் கவலைப்படாமல், சில நாட்கள் அண்டை மாநிலங்களுடன் சண்டை போட்டது எல்லாம் நம்மை ஏமாற்றிடும் கண்துடைப்பு நாடகமே எனத் தெரிகிறது.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க இந்த நிலைதான் என்பது பரிதாபத்திற்குரியதே! இந்த நிலையில் நிலத்தடி நீரும் அபாயகரமான அளவில் இருக்கிறது. நூறு அடி தோண்டினாலே உப்பு நீராக வருகிறது. மேலும் சென்னை புறநகரில் ஆயிரம் அடிகளைத் தாண்டியும் நீர் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரியதே. இதற்கெல்லாம் நிரந்த தீர்வு காணாமல் அரசு காலம் தாழ்த்துமேயானால் இனிவரும் காலம் வறண்ட காலமாகவே இருக்கும் மேலும் நாமெல்லாம் எந்த அளவுக்கு பயங்கரமான ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கையில் நெஞ்சம் பதறுகிறது என்பதுதான் நிஜம்.

கே. சங்கர், அமுரா