தமிழ் திரைத்துறையைக் காப்பாற்ற ஒரே தீர்வு தமிழ் திரைப்பட வர்த்தக சபை – டி.எஸ்.ஆர். சுபாஷ்

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநில தலைவர் மற்றும் சினிமா எடிட்டர், டி.எஸ்.ஆர் சுபாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

[pullquote]உலகின் முதல் கலைஞனே கடவுளாகத்தான் இருக்க முடியும். இல்லையென்றால் இப்படிப்பட்ட வியக்கத்தக்க, ரசிக்கத்தக்க, வலிமைமிக்க, பல தரப்பட்ட  காட்சிகளுடன் பல விதமான சத்தங்களைக் கொண்ட பிரம்மாண்டமான உலகை படைத்திருக்க முடியுமா? [/pullquote]

மனித குல கண்டுப்பிடிப்புகளில் மிகவும் அதிசயத்தக்க ஒன்று சினிமா. ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் ஆளுமை கொண்டது சினிமா. அது ஒரு கலை.

உலகின் முதல் கலைஞனே கடவுளாகத்தான் இருக்க முடியும். இல்லையென்றால் இப்படிப்பட்ட வியக்கத்தக்க, ரசிக்கத்தக்க, வலிமைமிக்க, பல தரப்பட்ட  காட்சிகளுடன் பல விதமான சத்தங்களைக் கொண்ட பிரம்மாண்டமான உலகை படைத்திருக்க முடியுமா?

மனிதனின் கவலையை மறக்க உருவானதே கலை. கவலை. அதில் “வ”வை எடுத்துவிட்டால் வருவதே கலை. உலகில் உள்ள எத்தனையோ கலைகளில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருவது சினிமாக் கலைதான்.  காரணம் இதில் மட்டுமே பல்வேறுபட்ட கலைஞர்களால் ஒரே சமயத்தில் பங்கேற்ற முடியும் என்பதே!

சினிமா மக்களின் சொந்த பந்தமாக விளங்கிவிட்டது. மூன்று வேளை உணவுபோல் தவிர்க்க முடியாதாகிவிட்டது. அப்படிப்பட்ட சினிமா நமக்கு பல கலைஞர்களின் தியாகத்தாலும், உழைப்பாலும் கிடைக்கப்பெற்றது.

இந்திய சினிமா சென்ற ஆண்டுதான் (2013) நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. அடுத்து நாம் தென் இந்திய சினிமாவின் நூற்றாண்டிற்கான வேலைகளை துவங்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

இந்திய சினிமாவில் தென் இந்தியாவின் பங்கு சாதாரணமானதல்ல. அதேபோல் தென் இந்திய சினிமாவின் பெரும் பங்கு தமிழ் சினிமாவிற்கே உண்டு.

ஆம். சென்னைதான் தென்னக சினிமாவின் தாய்வீடு. தமிழகத்தில்தான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பெரும்பாலான திரைப்படஙகள் உருவாயின.

பிற மொழி கலைஞர்களும் தமிழகத்திலேதான் வாழ்ந்து வந்தனர். சினிமாவின் அசுர வளர்ச்சியில் சில பிரச்சனைகள் ஏற்பட துவங்கின.

இதனால், தென்னக சினிமாவின் ஜாம்பவான்களான “சேலம்” மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், “திருத்துறைப்பூண்டி” ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன் ஆகிய இருவரும் சேர்ந்து அவர்களுக்கான சொந்த இடத்தை வழங்கி அங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் சம்மந்தப்பட்ட முதலாளிகள் பிரச்சனை முதல் தொழிலாளர்கள் பிரச்சனை வரை பேசி சுமூக முடிவு எடுக்க துவக்கப்பட்டதுதான் தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை.

இந்த வர்த்தக சபையை ஒழுங்குப்படுத்தி செயல்பட வைத்தவர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் சினிமாவின் முதல் புரட்சி இயக்குநர் கே.சுப்ரமணியம். (தியாகராஜபாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி, பி.எஸ்.சரோஜா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, எஸ்.டி.சுப்புலட்சுமி, சரோஜாதேவி உட்பட ஏராளமான பிரபலங்களை அறிமுகப்படுத்தியவர். நடிகர் சங்கத்தை
உருவாக்கியவர்.)

[pullquote]ஏ.வி.மெய்யப்பச்செட்டியார், ஏ.எல்.சீனிவாசன், ஜுப்பிட்டர் சோமு, மொய்தீன், பட்சிராஜா, ஸ்ரீராமுலு நாயுடு உட்பட பலர் இதன் மூலம் பல பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்த்து வைத்து தென் இந்திய சினிமாவை தலை நிமிரச் செய்தனர். [/pullquote]

1939ல் துவங்கிய இந்த வர்த்தக சபையின் முதல் தலைவராகவும் விளங்கியவர் கே.சுப்ரமணியம் தான்.

இதில் ஸ்டுடியோ முதலாளிகள். தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள் என அனைவரும் அங்கம் வகித்தனர்.

ஏ.வி.மெய்யப்பச்செட்டியார், ஏ.எல்.சீனிவாசன், ஜுப்பிட்டர் சோமு, மொய்தீன், பட்சிராஜா, ஸ்ரீராமுலு நாயுடு உட்பட பலர் இதன் மூலம் பல பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்த்து வைத்து தென் இந்திய சினிமாவை தலை நிமிரச் செய்தனர்.

1940 களில் தணிகைக்குழு அதாவது சென்சார் போர்டு வருவதற்கு முன்பு அப்பணியை செய்து வந்ததும் இந்த வர்த்தக சபைக் குழுவினரே.

1945 ல் அகில இந்திய வானொலி நிலையத்துடன் தென் இந்திய வர்த்தக சபை மூலம் ஒரு ஒப்பந்தம் போட்டது. அதாவது ராயல்டி முறையில் பாடல்களை ஒளிபரப்புவதுதான் அது. இன்று வரை அது நடைமுறையில் உள்ளது.

இதன் புதிய கட்டிடத்தை 1968 ல் அன்றைய முதல்வராக இருந்த “தமிழகத்தின் பெர்னாட்ஷா’’ அறிஞர் அண்ணா அவர்கள் திறந்து வைத்தார்.

அதன் பின் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதலாளிகள் மற்றும் முன்னணி கலைஞர்கள், தங்களின் மொழிக்கான திரைப்படங்களை தங்களுடைய மாநிலத்திலேயே தயாரித்துக் கொள்ளும் நிலை உருவாக்கிக் கொண்டார்கள்.

இதனால், அவர்களின் பலர் அவர்களுடைய மாநிலத்திற்கே குடி போகவேண்டிய நிலை உருவானது. அவர்களுடைய வசதிக்கேற்ப, லேப், ஸ்டுடியோக்கள் எல்லாம் அமைத்துக்கொண்டார்கள்.

அப்படிப்பட்ட சூழலில், அந்த மாநிலத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள, ஆந்திராவில் ஏ.பி.பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ், கேரளாவில் கேரளா பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ், கர்நாடகாவில் கர்நாடகா பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் என அந்தந்த மாநிலங்களில் தங்களுக்கென வர்த்தக சபையை உருவாக்கிக் கொண்டு செயல்பட துவங்கினார்கள்.

ஆனால், தமிழ் நாட்டில், தமிழ் பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் என்று நாம் துவங்கவில்லை. காரணம். கலைக்கு மொழி இல்லை. கலை என்பது ஒரு உணர்வு என்பதாலும், சென்னை தென்னிந்திய சினிமாவின் தாய் வீடாக விளங்கி வருவதாலும், தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை என்பது நமது சகோதர்களின் ஓட்டு மொத்த கூட்டமைப்பு என்பதாலும் தான்.

ஆனால், அவர்கள் யாரும் அப்படி நினைப்பதில்லை என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று. மற்ற வர்த்தக சபையை நடத்திக் கொண்டிருப்பவர்களே தென் இந்திய திரைப்பட வர்த்தக சபையைத் தீர்மானிக்கும் நிலை உருவாக்கப் பட்டுவிட்டது காலத்தின் கொடுமை.

இதற்கு, தமிழ் திரையுலகைச் சேர்ந்த சில கறுப்பாடுகளும் கண்டுக் கொள்ளாமல் இருப்பது அதைவிட பெரிய கொடுமை.

ஆனால், அந்நிலையை மாற்ற மறைந்த தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி போன்றவர்கள் பெரும் முயற்சிச் செய்து தோல்வியடைந்தனர்.

இந்த நிலையில்தான் தமிழகத்தில் தமிழக முதல்வரின் துணையுடன் சென்னையில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது.

அதில், பல கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டது ஒரு புறம் இருந்தாலும், நாம் மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம். தமிழ் திரையை தலைநிமிரச் செய்தவர்களில் பலர் புறக்கணிக்கப்பட்டதுதான். பத்திரிகையாளர்கள் நிலை அதை விட மோசமாகவே இருந்தது.

அதற்கு காரணம், தமிழ் அரசு அல்ல. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையே! இச்சபை துவங்கி 75 ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழர்களை மட்டும், அதாவது தமிழ் திரைப்பட கலைஞர்களை மட்டும் தாழ்த்தி, அவர்களுக்குள் பிரிவினையாக்கி வருகின்றனர், சிலர்.

[pullquote]பல கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டது ஒரு புறம் இருந்தாலும், நாம் மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம். தமிழ் திரையை தலைநிமிரச் செய்தவர்களில் பலர் புறக்கணிக்கப்பட்டதுதான். பத்திரிகையாளர்கள் நிலை அதை விட மோசமாகவே இருந்தது. [/pullquote]

தொடர்ந்து தமிழகத்திலுள்ள திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருமே அவமானப்படுத்தப்படுகின்றனர்.

தமிழ் திரைப்பட வர்த்தக சபை என்று ஒன்று நாம் அப்போதே உருவாக்கியிருந்தால், நம் மண்ணில் நடந்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் அவமானப்பட்டிருக்கமாட்டோம்.

தமிழர்களைத் தாழ்த்தி செயல்படும் அமைப்பு தமிழகத்திற்கு தேவையா? தமிழ் மண்ணிலே சாதனைப் படைத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்களால் உருவாக்கப்பட்ட தென்னிந்திய வர்த்தக சபையில், தமிழர்களின் நிலை என்ன?

அடுத்து நாம் எதிர்கொள்ளப் போவது தென் இந்தியாவின் 100 ஆண்டு சினிமா. தமிழக திரையுலகின் நூற்றாண்டு விழா.

இவ்விழா, தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு விருந்தாகவும், இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாகவும் அமைய வேண்டாமா?

அதற்கு, தமிழர்களாகிய நாமே தீர்மானிப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு தேவை, தமிழ் திரைப்பட வர்த்தக சபைதான்.

ஆந்திராவில் படிக்கும் குழந்தைகளின் கல்வி பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும், அவர்களுடைய பெற்றோர்களும், உறவினர்களும் கூடி பேசி முடிவு எடுப்பதுபோல், கேரளாவில் படிக்கும் குழந்தைகளின் முடிவுகளை அவர்களின் பெற்றோர்களே எடுப்பதுபோல், கர்நாடகாவில் படிக்கும் குழந்தைகளின் முடிவுகளை அவர்களின் பெற்றோர்களே எடுப்பதுபோல், நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி நாம்தானே பேசி முடிவு எடுக்க வேண்டும்.

நம்முடைய பிள்ளைகளின் பிரச்சனைகளைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் முடிவு எடுக்க நாம் மட்டும் மற்ற மூன்று மாநிலங்களிலுள்ள பெற்றோர்களை அழைத்துதான் பேச வேண்டும் என்றால் எப்படி? அப்படித்தான் இப்பிரச்சனையை நாம் அணுகவேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ள பல நல்ல அற்புதமான நற்குணங்களைக் கொண்டவர்கள் அவர்களை நெறிமுறைப்படுத்த வேண்டும்.

மற்றவர்களுக்கு முன்னுரிமை தந்து நம்மை நாமே புறக்கணித்துக்கொண்டிருப்பது எப்போது நிறுத்தப்பட போகிறது? எல்லா பிரச்சனைகளிலும், மற்றவர்களின் தீர்மானத்தைப் பற்றி எத்தனை நாள் விவாதித்துக் கொண்டிருப்பது.

திரையுலகப் பிரச்சனை, தனித்தமிழ் ஈழப் பிரச்சனை உட்பட, தமிழர்களின் அனைத்து உரிமைப் பிரச்சனைகளுக்கும் இனி தீர்மானிப்பது நாமாகத்தான் இருக்க வேண்டும்!

தந்தை பெரியார் சொன்னார். வியாதியை குணப்படுத்துவது இரண்டு முறை. ஒன்று மருந்து மாத்திரை கொடுத்து குணப்படுத்துவது. மற்றொருன்று அறுவை சிகிச்சை முறையில் குணப்படுத்துவது.

தமிழர்களின் மானம் எனும் உயிரைக் காப்பாற்ற மருந்து மாத்திரைகள் இனி தந்து பலன் இல்லை. அறுவை சிகிச்சைதான். ஆம். அதுவே தமிழ் திரைப்பட வர்த்தக சபை.

இந்த வர்த்தக சபை. நம்முடைய சக தோழர்களை அதாவது மற்ற மாநில கலைஞர்களை நம்மிலிருந்து தனிமைப்படுத்தி பார்கக அல்ல. நம்முடைய தனித்துவத்தையும், தியாகத்தையும் தக்கவத்துக் கொள்ளத்தான்.

[pullquote]தமிழர்களின் மானம் எனும் உயிரைக் காப்பாற்ற மருந்து மாத்திரைகள் இனி தந்து பலன் இல்லை. அறுவை சிகிச்சைதான். ஆம். அதுவே தமிழ் திரைப்பட வர்த்தக சபை. [/pullquote]

நாம் சந்தித்து வரும் தொடர் அவமானங்கள் நமக்கு வலியுறுத்தி வருவது இதைத்தான்.

எழுத்தாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி, இயக்குனர்கள் சங்கம் என நம்மிடையே உள்ள அமைப்புகளுக்குள்ளும், நிர்வாகிக்களுக்குள்ளும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழ் திரைப்பட வர்த்தக சபை உருவாக்க அனைவரும் ஒரு குடையின் கீழ் செயல்பட வேண்டும். இதுவே நமக்கு தீர்வாகும்.

என்று கூறியுள்ளார்

Check Also

நமது வ(வி)ழிக்காட்டிக்கு 75 ஆம் பிறந்த நாள்!

பத்திரிகையாளர் என்பவர் சாதராணமானவர்கள் அல்ல, அவர்கள் இந்த ஜனநாயக நாட்டின் நான்கு தூண்களில் முக்கிய தூணாக மக்களோடு பழகி அவர்களுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *