திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிய மாலை நிகழ்வு

திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வந்த ஆண்டாள் மாலையை சூடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பதி பிரம்மோத்ஸவத்தை ஒட்டி, “சூடிகொடுத்த சுடர் கொடி’ என்று பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை கருட சேவையின்போது, மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி, கடந்த 17-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து அனுப்பப்பட்ட மலர் மாலை, மலர் ஜடை, மலர் கிளிகள், பட்டுவஸ்திரம் உள்ளிட்டவை திருமலைக்கு சனிக்கிழமை வந்து சேர்ந்தது. அந்த மலர் மாலையை தேவஸ்தானம் சார்பில் திருமலை பெரிய ஜீயர் பெற்றுக் கொண்டார். அதை ஏழுமலையானுக்கு அணிவித்த பின்னர், ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள கருட சேவையின்போது உற்சவ மூர்த்திக்கு அணிவிக்கப்படுகிறது.

பிரம்மோத்ஸவத்தின் 4-ஆம் நாளான சனிக்கிழமை காலை மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாடு மேய்க்கும் கிருஷ்ணன் அவதாரத்தில், “நினைத்ததைக் கொடுக்கும்’ கல்பவிருட்ச வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து இரவு, வண்ண மாலைகளால் அலங்கரிக்கபட்ட, ஸர்வபூபால வாகனத்தில், தன் உபய நாச்சியார்களுடன், நாரை வாயை பிளந்த கிருஷ்ணன் அவதாரத்தில் மாட வீதியில் வலம் வந்தார். இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

திருக்குடைகள் ஒப்படைப்பு:

பிரம்மோத்ஸவத்தையொட்டி, சென்னையில் இருந்து இந்து தர்மார்த்த சமிதி சார்பில், கடந்த 11 ஆண்டுகளாக திருக்குடைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 14-ஆம் தேதி சென்னையில் இருந்து பாதயாத்திரையாகப் புறப்பட்ட 9 திருக்குடைகள் சனிக்கிழமை மாலை திருமலையை வந்தடைந்தன. அவற்றை ஏழுமலையான் கோயில் முன் வாசல் அருகில் இந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலர்கள் கோபால்ஜி, வேதாந்தம் ஆகியோர் தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Check Also

காளியம்மன் திருக்கோயிலில் திருக்கல்யாணம் திருக்கல்யாணம்…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் 1 வது தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காளிமம்மன் திருக்கோயிலில் 96 வருடங்களுக்கு பின் அஷ்டபந்தன …