தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் சங்கத்தை பிளவுப் படுத்துவதாக அர்த்தம் இல்லை என்றும் விஷால் கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் வரும் 18ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் சேலத்தில் நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் தங்களது பிரசாரத்தை தொடங்கினர்.

முன்னதாக செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர்.

அப்போது பேசிய விஷால், நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சியை ஏற்படுத்த தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் தரப்பில் முயற்சி நடத்தப்படுவதை சுட்டிக்காட்டினார். அந்த முயற்சிகளை மதிக்கும் அதே வேளையில், சமரசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார். திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்றும் விஷால் தெரிவித்தார்.

தங்கள் அணி வெற்றி பெற்றால், நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரையும் கவுரமாக நடத்துவோம் என்று கூறிய விஷால், கடந்த மூன்று ஆண்டுகளாக  கேள்வி கேட்டும் எந்த பலனும் இல்லை என்பதாலேயே தேர்தலில் போட்டியிடும் முயற்சியை எடுத்ததாகவும் கூறினார்.

தேர்தலை முன்னிட்டு அனைத்து நடிகர்களை சந்தித்து வருவதாக தெரிவித்த விஷால், சேலத்தில் தொடங்கி நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுகல், காரைக்குடி, மதுரை உட்பட அனைத்து பகுதிகளுக்கும் செல்ல உள்ளதாகவும் கூறினார்.

இந்த சந்திப்பின் போது நடிகர்கள் விஷால், கருணாஸ், ராஜேஷ், நந்தா, விக்னேஷ், சாந்தனு, பசுபதி, நடிகைகள் கோவை சரளா, ரோகினி, குட்டிபத்மினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் சங்க விவகாரம் மற்றும் தேர்தல்  தொடர்பாக தங்கள்  அணியினர் தயாரித்த ஆவணப் படத்தையும் பத்திரிக்கையாளர்  சந்திப்பின்போது விஷால் வெளியிட்டார்.

Check Also

️டியூஜே வின் தேர்தல் விழிப்புணர்வு…

ஏப்ரல் 6 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதனையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களில் அனல் பறக்கிறது. அவர்களது தேர்தல் …