தேமுதிக யாருடன் கூட்டணி? விஜயகாந்த் பதில்

தே.மு.தி.க. 11-ம் ஆண்டு தொடக்கவிழா, விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் தேமுதிக மக்களிடமும், தெய்வத்துடனும்தான் கூட்டணி. வேறு யாரிடமும் கூட்டணி இல்லை என்று கூறினார்.

 இந்த நாள் மிக்க மகிழ்ச்சியான நாள். தே.மு.தி.க. தொடங்கி 10 ஆண்டுகள் முடிந்து, 11-ம் ஆண்டு தொடங்குகிறது. எனவே அனைத்து தொண்டர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நான் எங்கு சென்றாலும் பத்திரிகையாளர்கள் என்னிடம் யாரிடம் கூட்டணி என்றுதான் கேட்கிறார்கள். மக்களை நம்பிதான் நான் இருக்கிறேன். மக்களிடமும், தெய்வத்துடனும்தான் கூட்டணி. வேறு யாரிடமும் கூட்டணி இல்லை. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜெயலலிதாவை குறித்து பேசியதற்கு, அ.தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் இளங்கோவன் பற்றி பேசியதை காதுகொடுத்து கேட்க முடியாது.

அந்த அளவுக்கு பேசினார்கள். அதை ஏன் ஜெயலலிதா தட்டிக்கேட்கவில்லை. ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்று 4½ ஆண்டுக்கு பின்பு சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினார்கள். அதில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்து உள்ளது என்று ஜெயலலிதா அறிவித்து உள்ளார். பல மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக்க உள்கட்டமைப்பு வசதி கூட கிடையாது. அந்த உள்கட்டமைப்பை மேம்படுத்தாமல் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு எப்படி வரும். இந்த திட்டத்துக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வைத்து அறிவிப்பதற்கே 2 மாதம் ஆகும். அதற்குள் ஆட்சியும் முடிந்துவிடும்.

எனவே ஜெயலலிதா இதுபோன்ற ஒரு பொய்யை மக்களிடம் சொல்ல வேண்டாம். ஏனென்றால் தமிழக மக்கள் தற்போது தெளிவாக இருக்கிறார்கள். அவர்களிடம் இதுபோன்ற பொய்யான திட்டத்தை அறிவித்து ஏமாற்றிவிட்டு, மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என்று கனவு காண வேண்டாம். தமிழகத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் கட்சி பாகுபாடின்றி, தமிழக முதல்-அமைச்சரான நீங்கள் நல்லது செய்தால், நான் கட்சியை கலைத்துவிட்டு, உங்கள் கட்சியில் இணைக்க தயாராக இருக்கிறேன்.

நான் சம்பாதிக்க கட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்யதான் கட்சியை நடத்தி வருகிறேன். நான் ஜாதி, மொழியை கடந்து கட்சியை நடத்தி வருகிறேன். எனவே வருகிற 2016-ம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது.

கூட்டணி குறித்து இப்போதே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தால் போதும். ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்று 4½ ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த வில்லை. மதுரையில் 100 அடி உயரத்தில் தமிழ்தாய் சிலை அமைக்கப்படும் என்றார்கள். ஆனால் சிலை செய்யும் பணியே இன்னும் தொடங்கவில்லை.

அதுபோன்று அவினாசி-அத்திக்கடவு திட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. கோவைக்கு மோனோ ரெயில் திட்டம் வரும் என்றார்கள். அந்த திட்டமும் எங்கு சென்றது என்று தெரியவில்லை. ஆனால் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு ரூ.100 கோடி செலவு செய்து எங்கு பார்த்தாலும் கட்-அவுட் வைத்து உள்ளனர்.

எனவே மக்களை ஏமாற்றும் ஜெயலலிதாவை கெட்-அவுட் என்று சொல்லும் காலம் வந்துவிட்டது. என கூறினார்.

கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், மற்றும் பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …