தேர்தல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் நியூஸ் சேனல்கள் மற்றும் மக்களை ஏமாற்றிய நிறுவனங்கள்

டெல்லியைச் சேர்ந்த நியூஸ் எக்ஸ்பிரஸ் இந்தி டிவி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் எதிரொலியாக தற்போது டைம்ஸ் நவ் டிவியும் தனது கருத்துக் கணிப்புகளை நிறுத்துவதாக தகவல்கள் கூறுகின்றன.

நியூஸ் எக்ஸ்பிரஸ் டிவி கருத்துக் கணிப்புகளை எந்த அளவுக்கு போலியானதாக, மோசடியாக செய்கிறார்கள் என்பதை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது. அது ஸ்டிங் ஆபரேஷன் நடத்திய கருத்துக் கணிப்பு நிறுவனங்களில் ஒன்று சி வோட்டர்.

இதையடுத்து சிவோட்டர் மூலம் கருத்துக் கணிப்புகளை வாங்கிப் போட்டு வந்த இந்தியா டுடே தனது கருத்துக் கணிப்புகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த வரிசையில் தற்போது டைம்ஸ் நவ் டிவியும் இணைகிறது. இந்த டிவியின் கருத்துக் கணிப்புகளின்போது அர்னாப் கோஸ்வாமி, அது உண்மையா பொய்யா என்று கூட தெரியாமல் தொண்டை கிழிய தவறான தகவல்களை கொடுப்பது இனி நிறுத்தப்படும் என நம்பலாம்.

கடந்த ஒரு வருட காலமாகவே பல்வேறு டிவிகளிலும், நாளேடுகளிலும் இந்த கருத்துக் கணிப்புகள் கச்சை கட்டியிருந்தன. இவற்றையெல்லாம் அக்குவேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்திருக்கிறது நியூஸ் எக்ஸ்பிரஸ் சானலின் ஸ்டிங் ஆபரேஷன். இதில் பல கருத்துக் கணிபப்புகள் பொய்யானவை என்று அது கூறுகிறது.

11 கருத்துக் கணிப்பு நிறுவனங்களை அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் போல போய் அணுகி இந்த ஸ்டிங்கை நடத்தியுள்ளனர்.

இந்த நிறுவனங்களிடம் பேசும்போது கட்சிகளுக்காக இரண்டு டேட்டாக்களை அவர்கள் தயார் செய்வது தெரிய வந்தது. அதாவது உள்ளது உள்ளபடியே ஒரு டேட்டா. இன்னொன்று திரித்துக் கூறப்பட்ட தகவல்களுடன் கூடியது.

இந்த இரண்டு டேட்டாக்களுக்கும் தனித் தனியாக ரேட் போட்டு வசூலித்துள்ளனர்.இது போக தங்களது தேவைக்கேற்ப தகவல்களை திரித்துத் தர வேண்டுமானாலும் அதற்கும் தனியாக ரேட் தர வேண்டுமாம்.

இந்த மோசடி நிறுவனங்களில் சி வோட்டர்தான் நிறைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. எல்லாமே பாஜகவுக்கு ஆதரவானதுதான். இதனால் இந்த நிறுவனத்தின் கருத்துக் கணிப்புகள் அனைத்துமே பெரும் மோசடியானவை என்ற கருத்து எழுந்துள்ளது.

இதில் கியூ ஆர் எஸ் என்ற நிறுவனம், பாஜகவுக்கு உ.பி. சட்டசபைத் தேர்தலில் 200 சீட் கிடைக்கும் என்று பச்சையாக பொய் புழுகிய நிறுவனமாகும். அதேபோல சமாஜ்வாடிக் கட்சிக்கும் இதேபோன்ற ஒரு பொய் தகவலை அது தயாரித்துக் கொடுத்ததாம்.

ஆனால் இந்தத் தகவல்களுக்கு ஆதாரம் எதுவும் தங்களிடம் இல்லை என்று நியூஸ் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் ரவிகாந்த் மிட்டல் தெரிவித்துள்ளார். கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை இல்லாதவை, என்னவெல்லாம் செய்கின்றன என்பதை மக்களிடம் வெளிக்காட்டுவதே தங்களது நோக்கம் என்று இவர் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *