நாடாளும் மக்கள் கட்சி கலைப்பு: காங்கிரஸில் இணைந்தார் நடிகர் கார்த்திக்

நாடாளும் மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, அதன் தலைவர் நடிகர் கார்த்திக் புதன்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் கார்த்திக் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கார்த்திக், “நான் காங்கிரஸுக்கு புதியவன் அல்ல. மக்களவை தேர்தலிலும் எனது ஆதரவை அளித்தேன். இப்போது என் வீட்டுக்கு நான் திரும்பி வந்துள்ளேன். வீட்டில் ஒரு சின்ன பிரச்சினை இருக்கிறது. பிரச்சினை இருக்கும்போது வரவேண்டும் என்பதால் வந்திருக்கிறேன்.

இன்று காங்கிரஸ் கட்சியுடன் ஒரு புதிய திருமண பந்தம் உருவாகியுள்ளது. இந்த விவாகம் என்றைக்குமே ரத்தாகாது.

இந்தியாவை ஆள காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு எந்த கட்சிக்கும் தகுதியில்லை.

இப்போது இந்தியாவை வளமாக்குகிறோம் என்று ஒரு கட்சி பேசுகிறது. ஆனால் நடப்பது என்ன? எல்லையில் பிரச்சினை, மற்ற இடங்களில் ஆங்காங்கே குண்டு வெடிப்பு, தீவிரவாத அச்சுறுத்தல். இலங்கையில் நம் தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. கூட்டணி தலைவர்கள் அதிருப்தியில் இருக்கின்றன.

பாஜக ஒரு பியூஸ் போகும் பல்பு. அது விரைவில் மங்கிவிடும். காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும். நாடு வளம் பெற மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்” என்றார்.

அதற்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “காங்கிரஸ் கட்சி மிகவும் கஷ்டமான சூழல் இருக்கும் நேரத்தில் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். உங்களை அன்புடன் வரவேற்கிறேன். நீங்கள் ஒரு சிறந்த தேச பக்தர். துணிச்சலானவர். எதையும் எதிர்பார்க்காமல் வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு மிகப் பெரிய மனது. உங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளை கண்டு பயப்படாதீர்கள். நாங்கள் இருக்கிறோம்.

சோனியாகாந்திக்கு வெற்றி தோல்வி முக்கியமல்ல. நமது நாடுதான் முக்கியம். மதவெறி நாடாக இல்லாமல் மதசார்பற்ற நாடாக இருப்பதற்கு அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும். இமயம் முதல் குமரி வரை ஒரே தாயின் பிள்ளையாக இருந்தால் தான் காங்கிரசை வலுப்படுத்த முடியும்.

சிலர் இந்த கட்சியில் இருந்து விலகியது பலர் கட்சிக்குள் வருவதற்கு வசதியாக அமைத்துவிட்டது. காங்கிரஸ் என்கிற வீட்டை சீர் செய்து பலப்படுத்தினால் தான் நாட்டை காப்பாற்ற முடியும்” என்றார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் விலகியதற்கு இன்றைக்கும் வருத்தம் தெரிவித்தார் இளங்கோவன். கட்சியின் செல்லப் பிள்ளை வெளியேறியது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். அதேவேளையில் நடிகர் கார்த்திக் தேச பக்தி மிக்க இளைஞர் என பாராட்டினார்.

முன்னதாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக கார்த்திக் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது நினைவுகூரத்தக்கது.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *