பாவங்கள் போக்க, கண் திறக்கும் கரி வரத பெருமாள்

சென்னை கோயம்பேட்டிலிருந்து மதுரவாயல் செல்லும் சாலையில் வெங்காய மண்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, இடதுபுறம் திரும்பி சற்று தொலைவு நடந்து சென்றால் ஒரு பெருமாள் கோயில் தென்படும். அருகில் சென்று பெயர் பலகையைப் பார்க்கையில் கரிவரத பெருமாள் கோவில் என்றுள்ளது.

கோவிலில் நுழைந்ததும் அர்ச்சகர் நம்மை வரவேற்று கருவறைக்கு அழைத்து செல்கிறார்.

இறைவன் பிரம்மாண்ட வடிவமாக கரிவரத பெருமாளாக ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மற்றும் மார்பில் மஹாலக்ஷ்மியுடன் காட்சி தருகிறார். வலதுகரம் அபய ஹஸ்தம் காட்ட இடது கரம் கதாயுதம் தாங்கி உள்ளது.

மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும், சிம்ம முகமும் இருப்பது சிறப்பு. ஹஸ்த நட்சத்திர நாட்களில் இங்கு இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, புது வஸ்திரங்கள் சாற்றப்படுகின்றன. ஒன்பது கஜ புடைவைகள் பெருமாளுக்கு வஸ்திரங்களாக சாற்றப்படுகின்றன.

இப்பெருமானிடம் தரிசிக்க வரும் பக்தர்கள் எத்தகைய பாவங்களைப் புரிந்தாலும் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வரத்தினைத் தாயார் பெற்றுள்ளாள். எனவே பெருமானும் தன்னை சேவிக்க வரும் பக்தர்களுக்கு அவர்களின் பாவஙகளைப் போக்கி அபயஹஸ்தத்தில் நமக்கு அருள்புரிகிறார்.

அர்ச்சகர் தீபாராதனை காட்டுவதற்கு முன் கருவறையில் உள்ள மின் விளக்கினை அணைத்துவிடுகிறார். கற்பூர ஒளியில் பெருமானின் திருமுகத்தை தரிசிக்கிறோம். அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது. தீப ஒளியில் அதுவரை மூடியிருந்த இறைவனின் சற்றே வெண்மையான இரு கண்களும் திறந்து பெருமாள் நம்மைப் பார்ப்பது போன்ற அதிசயம் நிகழ்கிறது. அவரது விழிகள் இரண்டும் நம்மை பார்க்கின்றது. அந்த ஒருகணம் நம்மைச் சுற்றி நடப்பது எல்லாம் மறந்து போய் இறைவனுடன் நாம் ஒன்றிப்போய் நிற்பது நிதர்சனமான உண்மை.
புத்திர பாக்கியம் வேண்டி வருவோர், திருமணத் தடையால் கவலையடைந்தோர் இப்பெருமானிடம் வேண்டி தமது வேண்டுதல்களை நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.
கரி வரதராஜ பெருமாள் 27 நட்சத்திரங்களின் இறைவன். தங்கள் பிரார்த்தனைகளை மனதில் நினைத்து பக்தர்கள் ஒன்பது ரூபாய் நாணயங்களை இறைவனின் பாதத்தில் வைக்கின்றனர். இதேபோல் ஒன்பது நாள், ஒன்பது வாரம் என்று வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன. தங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் 27 மாதங்கள் வந்து வழிபட, தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடைபெறுகின்றன.
இறைவனின் ஜென்ம நட்சத்திரம் ஹஸ்தம். எனவே, ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து சிறப்புப் பிரார்த்தனைகள் செய்து பலன் பெறுகின்றனர்.

இங்குள்ள உற்சவர் சத்யநாராயண பெருமாள். மேலும், இக் கோயிலின் மற்றொரு சிறப்பு அம்சம் சந்தான கோபாலகிருஷ்ண விக்கிரகம். குழந்தை பேறு இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து சந்தான கோபால கிருஷ்ணனை மடியில் ஏந்தி சீராட்டி மகிழ்ந்தால் விரைவில் வீட்டில் மழலைச் செல்வம் தவழ்வது நிச்சயம்.
இங்கு பூமியில் கண்டெடுக்கப்பட்ட வராஹ ஆஞ்சநேயர் மிகவும் பிரசித்தம் கொடிமரத்தின் அருகில் தனிக்கோவிலில் அவர் பிரதிஷ்டை செயப்பட்டுள்ளார்.
மனதில் ஒருவித மகிழ்வுடன் மண்டபத்தில் அமர்ந்திருக்கும்போது திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரான் பாடல் நம் நினைவுக்கு வருகின்றது.

பரியனாகி வந்த அவுணன் உடல்கீண்ட அமரர்க்கு அரிய ஆதிபிரான் அரங்கத்தமலன் முகத்து கரியவாகிப், புடைபரந்து, மிளிர்ந்து, செவ்வரியோடி நீண்டஅப் பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே!

அரங்கமாநகரில் கண்வளரும் அழகிய மணவாளன் அவனுடைய திருமுக மண்டலத்தில் கறுத்து, விசாலமாகப் பரந்து ஒளிவீசும், செவ்வரியோடிய, காதளவோடிய கண்கள் என்னை அவனிடம் பித்தேறும்படி செய்து விட்டன. கல்நெஞ்சனான என்னையும் அவன் கண்கள் தன்பக்கம் இழுத்துக்கொண்டு விட்டன.

நன்றி,

Check Also

புதுவண்ணை ஷேபாவில் ” நம்ம ஆளுமை’

  சென்னை, புதுவண்ணாரப்பேட்டை , ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா ஷேபா குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ் …