ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா ?

ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பகுதி சிப்காட் வளாகத்தில் அமைந்திருப்பதாக பொய்யான தகவலை மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன், சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த ஆலையின் விரிவாக்கப் பகுதி, ஏற்கெனவே ஆலை செயல்படும் சிப்காட் வளாகத்தில் இல்லை. ஆனால் சிப்காட் வளாகத்தில் இருப்பதாக கூறி, ஆலையை விரிவாக்கும் திட்டத்துக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதில் இருந்து விலக்கு பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் சிப்காட் வளாகத்தில்தான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பகுதி அமைகிறது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சிப்காட் ஆகியவை பொய்யான பிரமாண பத்திரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. எனவே, பொய்யான தகவல் அளித்த மேற்கூறிய துறைகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நித்யானந்த் ஜெயராமன் கூறினார்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் இயக்க நிர்வாகி பாத்திமா பாபு கூறும்போது, “இந்த ஆலை அபாயகரமான ஆலை என வகைப்படுத்தப்பட்ட நிலையில், குடியிருப்பு பகுதியில் அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதித்துள்ளார். இதன் விளைவாக கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் நாம் கேள்விப்பட்டிராத கண் புற்றுநோய், சுவாச வாய் புற்றுநோய் போன்றவை ஏற்பட்டு வருகின்றன” என்றார்.

ஸ்டெர்லைட் ஆலை அருகில் உள்ள குமாரெட்டியாபுரத்தில் வசிக்கும் வெள்ளைத்தாயி கூறும்போது, “ஸ்டெர்லைட் ஆலையால் இங்கு நீரும், காற்றும் மாசுபட்டுள்ளது. இங்கு விளையும் விவசாய பொருட்களை மாடுகளுக்கு கூட வாங்குவதில்லை. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள இளம் பெண்களுக்கு மாதவிடாய் முறையாக வருவதில்லை. எனது மகன், வயிற்று வலியால் அண்மையில் இறந்துவிட்டான். இப்பகுதியில் முன்னோர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் காலம் போய், பெற்ற குழந்தைகளுக்கு இறுதிச்சடங்குகளை செய்ய வேண்டியுள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்” என்றார்.