ஸ்மார்ட் நகரங்களின் பட்டியல், தமிழ்நாட்டில் 12 நகரங்கள்

ஸ்மார்ட் நகரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களின் பெயர் பட்டியலை மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு டெல்லியில் இன்று வெளியிட்டார்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் கனவு திட்டங்களில் ஒன்றாக ஸ்மார்ட் நகரம் திட்டம் அமைந்துள்ளது. மொத்தம் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் காஷ்மீரில் அமைய உள்ள ஸ்மார்ட் நகரங்களின் பெயர்களை அறிவிப்பதில் இறுதி முடிவு எடுக்கப்படாததால் 98 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலை வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு, ஸ்மார்ட் நகரங்கள் நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்றார். ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலில் தமிழத்தைச் சேர்ந்த 12 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

 • சென்னை
 • கோவை,
 • மதுரை,
 • நெல்லை,
 • திருச்சிராப்பள்ளி,
 • சேலம்,
 • திருப்பூர்,
 • ஈரோடு,
 • வேலூர்,
 • தூத்துக்குடி,
 • திண்டுக்கல் மற்றும்
 • தஞ்சாவூர்

ஆகிய தமிழக நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று அறிவித்தார்.

​ஸ்மார்ட் நகரங்கள் உருவாவதால் ஏற்படும் பயன்கள் என்ன?

ஸ்மார்ட் நகரங்கள் உருவாவதால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத் தரம் மேம்பாடு உள்ளிட்டவை பற்றி விரிவாக பார்ப்போம்.

பொருளாதார வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சியை விரைவுபடுத்தும் விதமாக இந்தத் திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளது.

இதன்மூலம் ஒவ்வொரு ஸ்மார்ட் நகரத்திற்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் கிடைக்கும். இதற்கான நகரங்கள் போட்டி மூலம் தேர்ந்து எடுக்கப்படும்.

இருக்கும் சொத்துக்கள், வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டு தூய்மையான, வசதிகள் நிறைந்த ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும்.

இதில் பங்கேற்கும் குடிமக்களுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தூய்மையான தண்ணீர், கழிப்பிட வசதி, திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து வசதி, ஏழைகளுக்கு வீட்டு வசதி, மின் வசதி, மின்னணு ஆளுமை உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

இதே போன்று, பொதுமக்கள் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, நிலையான நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

அடிப்படை சேவைகள், குழந்தைகளின் தேவைகள், மழைநீர் வடிகால் அமைப்பு, பசுமையை பாதுகாக்க பூங்காக்கள் ஆகியவை நிறைவேற்றப்படும்.

நகர்ப்புற சீர்திருத்தத்தை மேற்கொள்ளும் வகையில், மின் ஆளுமை தொழில்முறை நகராட்சி பணிநிலை, நகராட்சி வரி மதிப்பீடு நகர்ப்பகுதிகளில் சீர்திருத்தங்கள் ஆகியவை மேற்கொள்ளப்படும்.

அடல் மிஷன் எனப்படும் அம்ருத் திட்டம் மூலம் 500 நகரங்களில் வளர்ச்சி திட்டங்கள் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

சில முக்கிய நதிகள், மாநில தலைநகரங்கள், முக்கிய நகரங்கள், மலை பகுதிகள், சுற்றுலா மையங்களை ஒட்டி ஸ்மார்ட் நகரங்கள் ஏற்படுத்தப்படும்.

10 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களின் திட்டத்திற்கு மத்திய அரசு 50 சதவிகிதமும், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கான திட்டத்திற்கு மூன்றில் ஒரு பங்கும் மத்திய அரசின் பங்களிப்பாக இருக்கும்.

இதற்கான மத்திய அரசின் நிதியுதவி மூன்று தவணைகளாக அளிக்கப்படும்.

நூறு ஸ்மார்ட் நகரங்களை அமைப்பதன் மூலம் கிராமங்கள் – நகரங்கள் இடையே உள்ள இடைவெளி குறையும்.

ஏழை மக்களின் பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகிய நோக்கங்களும் நிறைவேறும் என்பது மத்திய அரசின் உறுதியான நம்பிக்கை ஆகும்.

ஸ்மார்ட் நகரங்கள் என்றால் அனைத்து விதமான கட்டமைப்பு- பொருளாதார, நிதி, சமுதாய மற்றும் உள்கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நகர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டமாகும்.

Check Also

தமிழ்நாட்டில் பருப்பு விலை கடும் உயர்வு

வட மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பருப்பு வகைகளின் விலை கடும் உயர்வு. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், …