ஆஞ்சியோகிராம் & ஆஞ்சியோபிளாஸ்ட் அனிமேஷன்

ஆன்ஞ்சியோகிராம் & ஆன்ஞ்சியோபிளாஸ்ட் அனிமேஷன். இதயம் சம்பந்தமான உங்கள் சந்தேகங்களை இந்த விடீயோ மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்ஞ்சியோபிளாஸ்டி என்றால் என்ன

ஆன்ஜியோகிராம் செய்வது போலவே இருதய ரத்தக்குழாயினுள் பிளாஸ்டிக் டியூபைச் செலுத்தி, அதன் வழியாக எளிதாக அடைப்பை சரிசெய்யும் முறையே ஆன்ஜியோ பிளாஸ்டி. இது அறுவை சிகிச்சை அல்ல. மயக்க மருந்தும் தேவையில்லை.

ஆன்ஞ்சியோபிளாஸ்டி எவ்வாறு செய்யப்படுகிறது?

ஆன்ஜியோகிராம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குழாயைவிட சற்று தடித்த, அகலமான, எளிதில் வளையும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் டியூப் (Guide Catheter) தேர்ந்தெடுக்கப்படுகிறது.
வலது கையின் மணிக்கட்டிலோ, தொடைகளின் மேல்பகுதியில் உள்ள ரத்தக்குழாய் வழியாகவோ இந்த டியூப் செலுத்தப்பட்டு, அதன் நுனிப்பகுதி பாதிக்கப்பட்ட அல்லது அடைப்பு உள்ள இதய ரத்தக் குழாயின் ஆரம்பப்பகுதியில் நிறுத்தப்படுகிறது. அடுத்து மிக எளிதில் வளைந்து செல்லும் தன்மையை நுனிப்பகுதியாக கொண்ட நீண்ட மெல்லிய இழை (Guide Wire) கைடு டியூபின் வழியாக அடைப்பு உள்ள ரத்தக் குழாய்க்குள் செலுத்தப்படுகிறது. இதற்கு “வழிகாட்டி இழை’ என்று பெயர்.

இந்த வழிகாட்டி இழையின் மூலம் ரத்தக்குழாயில் உள்ள அடைப்பின் தன்மைக்கு ஏதுவான சுருக்கப்பட்ட பலூன் எடுத்துச் செல்லப்பட்டு, அடைப்பு உள்ள பகுதியில் நிறுத்தப்படுகிறது. இப்போது அந்த பலூனை விரிவடையச் செய்வதன் மூலம், அடைப்பின் பெரும்பகுதி ரத்தக்குழாயின் தசை சுவர்களுக்குள் அழுத்தப்படுகிறது. ரத்தக்குழாயின் வழி அகலப்படுத்தப்படுகிறது. அதன் பின் பலூன் மீண்டும் சுருக்கப்பட்டு ரத்தக்குழாயில் இருந்து வெளியே எடுத்து வரப்படுகிறது. இச்செய்முறையால் அடைப்பால் பாதிக்கப்பட்ட இருதய தசைக்கு ரத்த ஓட்டம் மீண்டும் சீராக்கப்படுகிறது.

அகலப்படுத்தப்பட்ட ரத்தக்குழாய் மீண்டும் சுருங்கி அடைபடாமல் தடுக்க, மெல்லிய, விரியும் தன்மை கொண்ட, பால்பாயின்ட் பேனாவில் உள்ள ஸ்பிரிங் போன்ற “உலோக வலை’ (Stent) அவ்விடத்தில் பொருத்தப்படுகிறது.

இந்த உலோக வலை இரு வகைப்படும்.
1. சாதாரண உலோக வலை (Bare Metal Stent)
2. மருந்து தடவப்பட்ட உலோக வலை (Drug Eluting Stent).

மருந்து தடவப்பட்ட உலோகவலை சில காரணங்களால் சாதாரண உலோக வலையைவிட சிறப்பானது. ஆனால் விலை அதிகமானது.

எல்லாருக்கும் மருந்து தடவப்பட்ட உலோக வலை தான் பொருத்தப்பட வேண்டும் என்பதில்லை. இதய ரத்தக்குழாயின் அடைபட்ட பகுதியின் அளவு, சர்க்கரை நோய் பாதிப்பு போன்ற சில காரணங்களைக் கருத்தில் கொண்டு எத்தகைய உலோக வலை பொருத்த வேண்டும் என மருத்துவரே தீர்மானிப்பார். மாரடைப்பு வந்து மூன்றில் இருந்து எட்டு மணி நேரத்திற்குள், மருத்துவமனை வருவோருக்கு ரத்தக்கட்டியைக் கரைக்கும் மருந்து தராமலேயே இத்தகைய சிகிச்சை முறை மேற்கொள்வதே மிகச்சிறந்ததாகும்.

மேலும் சிலவகை மாரடைப்புக்கு ரத்தக்கட்டியை கரைக்கும் மருந்து தரமுடியாது. அத்தகைய சூழலில் ஆன்ஜியோ பிளாஸ்டி போன்ற இத்தகைய சிகிச்சை முறைதான் உகந்ததாக இருக்கும்.

இந்த சிகிச்சைக்கு பின் இரண்டாவது நாளில் எழுந்து நடமாடலாம். நான்கு அல்லது ஐந்து நாட்களில் வீடு திரும்பலாம்.

நம்மில் பலருக்கு மாரடைப்பு வந்தபின், “இயல்பான, கடுமையான உழைப்புடன் கூடிய முழுமையான வாழ்க்கை வாழ்வது கடினம்; இனிமேல் ஒருவித ஓய்வு பெற்ற வாழ்க்கை முறை தான்’ என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. இது முற்றிலும் உண்மை அல்ல.

மாரடைப்பு வந்தவுடன் காலம் கடத்தாமல் விரைவாக, முறையாக சிகிச்சை பெற்றோருக்கு பாதிக்கப்படும் இதய தசையின் அளவை மிகவும் குறைக்கலாம். இதனால் இதய தசையின் பெரும்பகுதி வலுவிழக்காமலும், செயலிழக்காமலும் காப்பாற்றப்படுகிறது.

இதை மீண்டும் வலியுறுத்தி சொல்ல காரணம், மாரடைப்பிற்கு பின் உள்ள இதய தசையின் வலிமையே, பிற்கால வாழ்க்கை முறையை வகுப்பதில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.

மாரடைப்பிற்கான தற்போதைய நவீன மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறையால் பெரும்பாலானோருக்கு இதய தசை அவ்வளவாக வலுவிழப்பதில்லை. எனவே அவர்கள் மாரடைப்புக்கு பின்னும் முறையான மருத்துவ ஆலோசனையின் உதவியுடன் இயல்பான பலனுள்ள வாழ்க்கையை வாழலாம்.

Check Also

இயற்கை மருத்துவம்-பிரம்ம தண்டு

இந்த செடி முழுவதும் மருத்துவ குணம் கொண்டது.இலைச்சாற்றை 10மி காலை வெறும் வயிற்றில் 1 மாதம் அருந்தீ வந்தால் சொறி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *