இந்தியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கிய அமெரிக்க நிறுவனத்துக்கு அபராதம்

இந்திய ஊழியர்கள் எட்டு பேருக்கு குறைந்தபட்ச ஊதியத்துக்கும் மிகக் குறைவான சம்பளம் கொடுத்ததற்காக அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் மீது அந்நாட்டின் தொழிலாளர் நலன் அமைப்பு அபராதம் விதித்துள்ளது.

மணிக்கு 100 ரூபாய்க்கும் குறைவான சம்பளம் மட்டுமே கொடுத்து வாரத்துக்கு 122 மணி நேரங்கள் கணக்கில் இந்த ஊழியர்கள் வேலைவாங்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஊதியம் மற்றும் கூடுதல் நேர சம்பளம் தொடர்பான அமெரிக்க சட்டங்களை ‘தற்செயலாக தாங்கள் பின்பற்றத் தவறிவிட்டதாக’ இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்துள்ள கலிஃபோர்னியாவின் சிலிக்கன் வெலியில் உள்ள எலெக்டிரானிக்ஸ் ஃபார் இமெஜிங் என்ற நிறுவனம் குறிப்பிட்ட காலத்துக்கு தமக்காக வேலைபார்க்க இந்தியாவில் இருந்து எட்டு பேரை அழைத்துவந்திருந்தது.

ஃபாஸ்டர் சிட்டியில் இருந்த தமது நிறுவனத்தின் தலைமையகத்தை ஃப்ரெமோண்ட்டுக்கு மாற்றுவதற்கான பணிகளில் இந்த இந்திய ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அந்த நேரத்தில் எலெக்டிரானிக்ஸ் ஃபார் இமெஜிங் நிறுவனம் இந்த இந்தியத் தொழிலாளர்கள் எட்டு பேருக்கும் அவர்கள் சாதாரணமாக இந்தியாவில் பெங்களூருவில் பெற்று வந்த அதே சம்பளத்தை அமெரிக்காவில் வைத்து வழங்கியுள்ளது.

மணிக்கு கிட்டத்தட்ட 75 ரூபாய் என்ற கணக்கில் வழங்கப்பட்ட சம்பளம் இது.

இத்தொகையை அமெரிக்க டாலரில் பார்த்தால் மணிக்கு $1.21 ஆகும்.

கலிஃபோர்னியாவின் சட்டங்கள்படி எந்த ஒரு தொழிலாளிக்கும் குறைந்தபட்சம் மணிக்கு $8 சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

தவிர ஒரு வாரத்தில் 40 மணி நேரங்களுக்கும் கூடுதலாக வேலைபார்த்தால் அதற்கு கூடுதல் வேலைக்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த சட்டங்கள் கூறுகின்றன.

ஆனால் இந்த எட்டு பேரும் வாரத்துக்கு 122 மணி நேரங்கள் வேலைவாங்கப்பட்டிருந்தும், அவர்களுக்கு இந்தக் சம்பளம் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

தொழிலாளர் நலனுக்கான அரசு அதிகாரிகள் நடத்திய ஆய்வுகளில் இந்த விஷயம் தெரியவந்தது.

லாஸ் ஏஞ்செலிஸில் தொழிலாளர்கள் பிழியப்படுகின்ற ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில்கூட இவ்வளவு குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டதை தான் பார்த்ததில்லை என தொழிலாளர் திணைக்களத்தின் மாவட்ட துணை இயக்குநர் மைக்கேல் ஈஸ்ட்வுட் குறிப்பிட்டுள்ளார்.

சம்பள பாக்கியாக இந்த ஊழியர்களுக்கு $40,000 வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ள தொழிலாளர் நல அமைப்பு இந்நிறுவனத்தின் மீது $3000 அபராதமும் விதித்துள்ளது.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *