9/11, அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதல் தினம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுரம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 14ம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உலகையே அச்சுறுத்திய இந்த தீவிரவாத தாக்குதலில், 2,977 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பழிதீர்க்க, கடந்த 2001ம் ஆண்டு இதே நாளில் அந்த கோர சம்பவம் நிறைவேறியது. அமெரிக்காவில் பயணிக்கும் 4 விமானங்களைக் கடத்திய அல்கொய்தா தீவிரவாதிகள், அவற்றில் இரண்டை, நியூயார்க்கில் இருந்த இரட்டை கோபுரம் மீது மோதச் செய்தனர். உலகின் வர்த்தக கேந்திரமாக விளங்கிய இந்த 2 கோபுரங்களும், அடுத்தடுத்த விமானத் தாக்குதல்களால், முற்றிலுமாக நிலைகுலைந்து போயின.

முதல் விமானம் மோதியதால் அங்கிருந்த மக்கள் சுதாரித்துக் கொள்வதற்கு முன்பாகவே, இரண்டாவது விமானமும் இரட்டை கோபுரம் மீது மோதியது. இந்த கோர தாக்குதலால், இரண்டு கோபுரங்களும் அடுத்தடுத்து சீட்டுக்கட்டுகள் போல் மண்ணோடு மண்ணாகின. இந்த தாக்குதலால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் நிலைகுலைந்து போனது உண்மைதான்.

இது ஒருபுறம் என்றால், உலகின் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்பட்ட அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், விமானத்தை மோதி, அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். வெர்ஜீனியாவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அமெரிக்காவின் வல்லமைக்கு சவால் விடுக்கும் விதமாக அமைந்தது.

கடத்தப்பட்ட மற்றொரு விமானத்தை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை மீது மோதி வெடிக்க வைக்க அல்கய்தா தீவிரவாதிகள் தீட்டிய சதி, அதே விமானத்தில் பயணம் செய்த நாட்டுப்பற்று மிக்க அமெரிக்கப் பிரஜைகளால் முறியடிக்கப்பட்டது. அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க அரசும், அதன் மக்களும் போராடத் தயாராகி விட்டனர் என்பதை முதன் முதலாக உலகிற்கு உணர்த்திய நிகழ்வும் இதுதான்.

இரட்டை கோபுரம் மீதான தாக்குதல் நடந்து 14 ஆண்டுகள் முடிந்து விட்ட போதிலும், அதில் உயிர் பிழைத்த சிலர், உடல் நலக் குறைவால் இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணம், மார்ஸி பார்டர்ஸ். இரட்டை கோபுரத்தில் பணியாற்றி வந்த இவர், அல்கொய்தா தீவிரவாதிகள் விமானத்தை மோதி தாக்குதல் நடத்திய போது உயிர் பிழைத்தவர்களில் ஒருவர். இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட போது, உடல் முழுவதும் புழுதியால் மூடப்பட்டு இவர் நடந்து வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம், இரட்டை கோபுர தாக்குதலின் கோரத்தை உலகிற்கு உணர்த்தியது.

ஆனால் இந்த இரட்டைக் கோபுரத்தாக்குதல் வேறு சிலரின் திட்டமிட்ட சதி என்றும் பல கருத்துக்கள் உலா வருகின்றனர்.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …