இந்தி தொலைக்காட்சி விவாதத்தில் அடிதடி

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐபிஎன்7 என்ற இந்தி தொலைக்காட்சியில் நேற்றிரவு சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா குறித்து நேரலையாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அதில் பங்கேற்ற ஓம் ஜி என்ற சாமியார், மற்றொரு பங்கேற்பாளரான ஜோதிடர் ராக்கி பாய் என்ற பெண்ணிடம் கடுமையான வாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, ராதே மா குறித்து எவ்வாறு விமர்சிக்கலாம்; உங்களை சரி செய்யுங்கள் முதலில்.. என்று ஓம்ஜி தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராக்கி பாய் பேசிக்கொண்டிருந்த போதே, மற்றொரு பங்கேற்பாளரான தீபா சர்மா என்ற பெண்ணை குறிப்பிட்டு பேசிய ஓம் ஜி , அவரது வாழ்க்கை குறித்தும், அவர் மீதான குற்ற வழக்குகள் குறித்தும் விமர்சித்தார்.

இதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த தீபா சர்மா, திடிரென ஓம் ஜி அருகே சென்று அடிக்க தொடங்கினார். உடனே, ஓம்ஜியும் தீபா சர்மாவை கன்னத்தில் அடிக்க இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

இந்த காட்சி பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்கேற்பாளர்களின் நடத்தையை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், அவர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்வதாகவும், ஐபிஎன்7 தொலைக்காட்சி கூறியுள்ளது.

இதனிடையே, இணையத்தில் வெளியான அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Check Also

தற்கொலைகள் இந்தியாவில்தான் அதிகம்

உலக அளவில் பார்க்கும் போது, இந்தியாவிலேயே தற்கொலைகள் அதிகம் நடப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் …