தமிழகத்தின் மாவட்ட நீதிமன்றங்களில் இனி தமிழிலேயே தீர்ப்பு

தமிழ்நாட்டில் அமைந்துள்ள சார்நிலை மற்றும் கீழ் நீதிமன்றங்களில் இனி வரும் காலங்களில் தமிழ் மொழியில் மட்டும் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்பு வழங்க வழிவகுக்கும் சுற்றறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் விசாரணையில் இந்த தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கறிஞர் சோலை சுப்ரமணியம் என்பவர் கடந்த 2010ம் ஆண்டு தொடர்ந்த வழக்கு ஒன்றில், 1994ம் வருடம் நீதிமன்றப் பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில் சட்டத்துக்கு முரணான வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாக குற்றம் கூறினார். அதில் தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொள்ளாத அல்லது அம்மொழியை அறியாத நீதிபதிகள், தமிழ் மொழி தவிர ஆங்கில மொழியிலும் தீர்ப்பினை எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அதற்கான கால வரம்பு எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இது தமிழ்நாடு ஆட்சி மொழிச்சட்டம் 1956க்கு எதிரானது என்றும் கூறி தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவின் விசாரணையில், கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி அன்று, கால வரம்பு குறிப்பிடப்படாதது ஒன்றும் தவறில்லை என்று கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு 370 நாட்கள் காலம் கடந்த பின்னர், வழக்கறிஞர் ரத்தினம் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கால வரம்புகளை குறிப்பிடும் பிரிவுகளான 4ஏ மற்றும் 4பி ஆகியவை கடந்த 1976ம் ஆண்டில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அதில் கால அவகாசம் குறித்து விளக்கும் பிரிவான 4பி-க்கு எதிராக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வாதிட்டபோதும் அவை மறுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து தான் நீதிபதிகள் அந்த சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதனால் இனி தமிழ்நாட்டில் அமைந்துள்ள சார்நிலை மற்றும் கீழ் நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் மட்டும் தீர்ப்பு வழங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

Check Also

ஊழல் வழக்கில் தண்டனை வழங்குவதில் கருணை காட்டக்கூடாது : உச்ச நீதிமன்றம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 1992–ம் ஆண்டு, கோபால் சுக்லா என்பவர் மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணி புரிந்தார். …

Leave a Reply

Your email address will not be published.