வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை உத்தரவு

வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களைச் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், கத்தகுறிச்சியைச் சேர்ந்த வி.தமிழரசன் தாக்கல் செய்த மனு விவரம்:

பி.எஸ்ஸி., பி.எட். படித்துள்ள எனக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பரிந்துரையின்பேரில் சான்றிதழ் சரிபார்ப்பு 2010-ஆம் ஆண்டு மே 13-இல் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், என்னை பணிக்குத் தேர்வு செய்யவில்லை. அந்தச் சமயத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை.

இதற்கிடையே, தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. 2011-2012-இல் நடந்த தேர்வில் 88 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அதன்பிறகும் பணிக்குத் தேர்வாகவில்லை. 2013-இல் நடந்த தகுதித் தேர்வில், 150-க்கு 92 மதிப்பெண்கள் பெற்றேன். ஆசிரியர் பணி நியமனத்துக்கு இது தகுதியான மதிப்பெண் ஆகும். ஆனால், பணி நியமனத்துக்கு முந்தைய நடைமுறைப்படி பரிசீலனை செய்யப்படவில்லை.

மேலும், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு தகுதிகாண் மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டு, அதற்கான அரசாணை 2014-ஆம் ஆண்டு மே 30-இல் வெளியிடப்பட்டது. இதில் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், தகுதித் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றைக் கொண்டு தகுதிகாண் மதிப்பெண் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தப் புதிய நடைமுறை, பணி நியமனத்துக்குக் காத்திருக்கும் போட்டியாளர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக அமைந்துவிடும். ஏனெனில், நடைமுறையில் இருக்கும் தேர்வு முறை, வினாத்தாள், மதிப்பீடு ஆகியவையும், 25 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்வு முறையும் ஒரே மாதிரியானதல்ல. 25 ஆண்டுகளுக்கு முன்பு அதிக மதிப்பெண்கள் எடுப்பது என்பது சுலபமல்ல. ஆனால், இப்போது நிலை மாறியிருக்கிறது. ஆகவே, சமீபத்தில் தேர்வு எழுதியவர்களையும், பல ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு எழுதியவர்களையும் ஒரே மாதிரியாகக் கருதுவது ஏற்புடையதல்ல.

அதேபோல பதிவு மூப்பு, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்படவில்லை. இந்தத் தகுதிகாண் மதிப்பெண் முறை அறிவியல்பூர்வமாக சிந்திக்காமல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், இதன் அடிப்படையில் நடத்தப்படும் ஆசிரியர் பணி நியமனக் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதேபோல, மேலும் 17 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரண், தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்தார். இருப்பினும், கலந்தாய்வு நடத்துவதற்கு எவ்விதத் தடையும இல்லையென்று உத்தரவிட்டார். ஏற்கெனவே, தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டிருந்தால், அதற்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

Check Also

ஊழல் வழக்கில் தண்டனை வழங்குவதில் கருணை காட்டக்கூடாது : உச்ச நீதிமன்றம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 1992–ம் ஆண்டு, கோபால் சுக்லா என்பவர் மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணி புரிந்தார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *