பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, கழகத் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
ஆயிரம் ஆயிரம் தலைமுறைக்கு தமிழர்கள் தழைத்தோங்கி வாழ்ந்திடப் பிறந்த நம் அன்புக்குரிய பேரறிஞர் அண்ணாவின் 107-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இந்த மடல் வழியாக, கழக உடன்பிறப்புகளைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ் இனத்தின் முன்னேற்றம் ஒன்றையே தனது வாழ்வின் இலக்காகக் கொண்டு, பேரறிஞர் அண்ணாவின் கனவுகளை நனவாக்கி, அவர் காண விரும்பிய வளமும், புகழும் மிக்க தமிழ் நாட்டை உருவாக்கிக் கொண்டிருக்கும் நமக்கு, அண்ணாவின் பிறந்த நாள் விழா என்பது குடும்பத்துடன் கொண்டாடி மகிழ வேண்டிய திருநாள் என்றால் எளிய குடும்பத்தில் பிறந்து, கடுமையான உழைப்பையும், பொது வாழ்வின் இலக்கணங்களையும் தந்தை பெரியாரிடத்தில் பயின்று, புத்துலகம் படைத்திட புதிய பாதை அமைத்திடல் அவசியம் என்பதை உணர்ந்து புதியதோர் அரசியல் இயக்கம் படைத்திட்டார் பேரறிஞர் அண்ணா.
அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட அசாதாரண சூழலில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் கருணையால் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த ஒரு தீய சக்தி, அண்ணா அவர்களது சிந்தனையில் தமிழ்ச் சமூகத்தின் விடியலுக்காக உருவாக்கிய இயக்கத்தை தனது குடும்பச் சொத்தாக மாற்றிக் கொண்டது.
எம்.ஜி.ஆர். அவர்கள், அண்ணா மீது கொண்ட எல்லையில்லாத அன்பினாலும், தமிழக மக்களுடைய முன்னேற்றத்தின் மீது அண்ணா அவர்களுக்கு இருந்ததைப் போலவே ஆழமான அக்கறை கொண்டிருந்ததாலும், தீய சக்தியிடமிருந்து அண்ணாவின் பேரியக்கத்தை மீட்டெடுத்து, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை உருவாக்கினார்.
பல கோடித் தொண்டர்களின் உழைப்பு ஒரு குடும்பத்தின் செல்வக் குவிப்புக்குப் பயன்படும் அவலத்தை துடைத்தெறிந்தார். அதன் மூலம் உண்மையான ஜனநாயகத்தின் பயன்களை தமிழக மக்கள் அனைவரும் பெற்றிட வழிவகை செய்தார். புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் பொது வாழ்விற்கு அழைத்து வரப்பட்ட நான், பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளையும், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் தன்னலமற்ற லட்சியங்களையும் எனது வாழ்வின் இரு கண்களாகக் கொண்டு, இந்த இயக்கம் புதுப் புது வெற்றிச் சிகரங்களை அடைய வழிநடத்தி வருகிறேன்.
தமிழக மக்களுக்காக என்னையே அர்ப்பணித்து வாழுகின்ற பெரும் பாக்கியத்தை இறைவன் எனக்கு அருளி இருக்கிறார்.
மக்களை தன் இதயத்தில் தாங்கிப் போற்றிய பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் பாதையில் தமிழக மக்களுக்காக வாழ்ந்து வரும் உங்கள் அன்புச் சகோதரியாகிய என்னுடைய வாழ்வும் மக்கள் நலன் காக்கும் வாழ்வாக அமைந்திருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. எனவே தான், பேரறிஞர் அண்ணா அவர்களின் இதயக்கனி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசியல் பாதையில், மக்கள் நலன்களைக் காப்பதிலும், மாநிலத்தின் உரிமைகளை மீட்பதிலும், பெண் கல்வியை வளர்ப்பதிலும், எல்லோருக்கும் வாழ்வின் இன்பங்கள் அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்வதிலும் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர வேண்டும்; அந்த வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்காக, அண்மையில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.
ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் உறுதிப்படுத்திட வேண்டும் என்ற இலக்கோடு, இந்த முதலீட்டாளர்கள் மாநாடு நடத்திடத் தேவையான அறிவுரைகளையும், ஊக்கத்தையும் நான் வழங்கினேன். அதன் பலனாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2,42,160 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் உறுதிப்படுத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட ஒட்டு மொத்த முதலீடுகளை விட இந்த 2 நாட்களில் பெறப்பட்ட முதலீடுகளே அதிகமானதாகும். இதன் பலனாக தமிழகத்தில் மிகப் பெரும் தொழிற்புரட்சி ஏற்படும். குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் சுபீட்சம் அடையும். அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறப் போகிறார்கள். எண்ணற்ற இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் வேலை வாய்ப்பு; அவர்களின் குடும்பங்களுக்கு நிரந்தர வருவாய்; தமிழக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பல புதிய தொழிற்சாலைகளை தொடங்குவதற்கான வாய்ப்பு ஆகியவற்றை `உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு’ உருவாக்கித் தந்துள்ளது. இந்த ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் அவரது நினைவுகளுக்கு நாம் செலுத்தும் போற்றுதலாக இந்த சந்திப்பின் வெற்றிச் செய்தி அமைந்திருக்கிறது.
எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு நிகழ்த்தி இருக்கும் நாடு போற்றும் பல்வேறு மகத்தான சாதனைகளை தமிழக மக்கள் அனைவருக்கும் எடுத்துக் கூறி, அடுத்து வருகின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மகத்தான வெற்றி பெறச் செய்வது கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரின் தலையாயப் பணியாக அமைந்திட, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த நாளில் சூளுரை ஏற்பீர் என்பதே இந்த ஆண்டு அண்ணா பிறந்த நாள் விழாவில் நான் உங்கள் முன் வைக்கும் பெரும் பணி. இந்தப் பணியைச் செய்து முடித்து, அடுத்து வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் நாம் பெற இருக்கும் மகத்தான வெற்றியை பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் காணிக்கை ஆக்கிட உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
என்று கூறியுள்ளார்.