இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் இந்தியாவுக்கு பேரிழப்பு ஏற்படும்: பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மிரட்டல்

இந்திய ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் அண்மையில் பேசுகையில் இந்திய ராணுவம் விரைவான, குறுகிய காலப் போருக்கு தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் கடந்த 1965ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் 50ஆவது ஆண்டு தினம், பாகிஸ்தான் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தேசியப் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியில் ராணுவம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ரஹீல் ஷெரீஃப் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

பாகிஸ்தான் ராணுவம் எதிரியுடன் நீண்ட காலப் போரானாலும், குறுகிய காலப் போரானாலும் அதில் ஈடுபடத் தயாராக உள்ளது. ஏதேனும் தவறான சாகசத்தில் எதிரி நாடு ஈடுபடுமேயானால், அதற்காக அந்நாடு பேரிழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

உள்நாட்டில் இருந்தும் வெளியில் இருந்தும் வரும் அனைத்து வித அச்சுறுத்தல்களையும் முறியடிக்கும் திறன், பாகிஸ்தான் ராணுவத்துக்கு உள்ளது. அது மரபு சார்ந்த போரோ அல்லது மரபுசாரா போரோ; கோல்ட் ஸ்டார்ட் திட்டமோ (இந்தியாவின் புதிய போர் உத்தி எனக் கூறப்படுவது) அல்லது ஹாட் ஸ்டார்ட் திட்டமோ, எதுவாக இருந்தாலும் சரி. அதை எதிர்கொள்வதற்கு பாகிஸ்தான் ராணுவம் தயாராகவே உள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது, காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காணப்படவில்லை. ஆகையால் காஷ்மீரின் எதிர்காலம் குறித்து ஐ.நா. சபையின் தீர்மானத்துக்கு உள்பட்டு, பொது வாக்கெடுப்பு நடத்தி தீர்வு காணப்பட வேண்டும்.  காஷ்மீர் விவகாரத்தை அப்படியே விட்டுவிட முடியாது என்றார் ரஹீல் ஷெரீஃப்.

பாஜக, காங்கிரஸ் கடும் கண்டனம்

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃப்பின் கருத்துக்கு பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து பாஜக செயலாளர்கள் ஸ்ரீகாந்த் சர்மா, சித்தார்த் நாத் சிங் ஆகியோர் கூறியதாவது:

ரஹீல் ஷெரீஃபின் கருத்து, ஒன்றுமில்லாத வெற்று தம்பட்டமாகும். பாகிஸ்தானில் நிலவும் உள்நாட்டுப் பிரச்னை, இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத்தை தூண்டிவிடுவது அம்பலமாகிவிட்டது ஆகியவற்றால் விரக்தியடைந்து, மிரட்டல் விடுக்கும் வகையில் ரஹீல் பேசியுள்ளார்.

கடந்த 1965ஆம் ஆண்டு போரில் பாகிஸ்தானின் தவறான சாகசத்துக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. 1971ஆம் ஆண்டு போரில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்தது. கார்கில் போரிலும் இதே நிலைதான் பாகிஸ்தானுக்கு நேரிட்டது. ஆனால், இவற்றை மறந்துவிட்டு, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி பகல் கனவு காண்கிறார். இதன்மூலம், இந்தியாவுடனான விவகாரத்தில் பக்குவமில்லாத தன்மையுடன் பாகிஸ்தான் செயல்படுவது வெளிப்படுகிறது என்றனர்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், “ரஹீல் ஷெரீஃபின் கருத்துகள், போர் வெறியையும், பகுத்தறிவின்மையையும் காட்டுகிறது; பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்துவதை உறுதிப்படுத்துவதுதான் உலகத்துக்கு தற்போதிருக்கும் தீர்க்கப்படாத ஒரே பிரச்னையாகும்’ என்றார்.

Check Also

ஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. சவுதி …