இலங்கையில் இன்று நடைபெற இருந்த தமிழகத்தின் ‘சூப்பர் சிங்கர்’ இசை நிகழ்ச்சி இப்போது இரத்து செய்யப்பட்டது என்ற செய்தி வெளிவந்துள்ளது . இந்த நிகழ்ச்சியை கொழும்பில் ஏற்பாடு செய்த ‘கோரல் ப்ரோபெர்ட்டி’ என்ற நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டது . கீழ்கண்டவாறு அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
“இன்று மாலை 6.30 மணிக்கு மருதானை, சென்.ஜோசப் கல்லூரியிலும், நாளை மாலை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்திலும் எமது நிறுவன ஏற்பாட்டில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த Airtel Super Singer 4 நிகழ்ச்சி தவிர்க்கமுடியாத காரணத்தினால் ரத்துச்செய்யப்பட்டுள்ளது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.”
தமிழகத்தில் இருந்து வெளிவந்த பலமான எதிர்ப்பின் காரணமாக இந்த நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தெரிகிறது . முதலில் இந்த செய்தி முகநூல் வழியாக மக்களுக்கு எடுத்து செல்லப்பட்டது . அதை தொடர்ந்து பல்வேறு தமிழின உணர்வாளர்கள் கொதித்து எழுந்து கண்டனம் தெரிவித்தனர் . தமிழர்களின் மூலமாக பணமும் புகழும் பெற்று தமிழர்களுக்கே இந்த இசைக் கலைஞர்கள் துரோகம் செய்கின்றனர் என்று முழக்கமிட்டனர் இனப்பற்றாளர்கள் .
அதன் பின்பு திரைத் துறையை சேர்ந்த இயக்குனர் கௌதமன் இந்த சூப்பர் சிங்கர் பாடகர்களுக்கு இலங்கை செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார் . இறுதியில் திரு வைகோ அவர்களும் வேண்டுகோள் விடுத்தார் . இப்படி பலமான எதிர்ப்பு தமிழகத்தில் இருந்து வந்ததை தொடர்ந்து இப்பாடகர்கள் இசை நிகழ்ச்சி செய்வதில்லை என்று முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக இந்த சூப்பர் சிங்கர் பாடகர்களில் திவாகர் என்னும் பாடகர் ஒரு தமிழர் . இவருக்கு ஆதரவாக பல இலட்சம் தமிழர்கள் வாக்களித்தனர் . இதன் மூலம் தான் திவாகர் சூப்பர் சிங்கர் தலைசிறந்த பாடகராக தேர்வு செய்யப்பட்டார் . இதன் மூலம் திவாகர் பெரும் புகழும் பணமும் பெற்றார் . இப்படியான நிலையில் திவாகர் இலங்கையில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக அறிவித்து இருந்ததை தமிழர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
முடிவில் தமிழக மக்களின் எதிர்ப்பே வென்றது . இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மூடி மறைப்பதற்கு நடத்தப்படும் இந்த இசை நிகழ்ச்சி இரத்தானத்தில் தமிழக மக்கள் பெரிதும் நிம்மதி அடைந்துள்ளனர் . இனி மேலும் இப்படியான துரோகத்தை தமிழக கலைஞர்கள் செய்ய முன்வரக் கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டி உள்ளது .
இந்த நிலையில் விஜய் டிவி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
“தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதிலும், தமிழ் மண்ணின் மாண்பை நிலை நிறுத்துவதிலும் என்றென்றைக்கும் உறுதியான நிலைப்பாடுகளுடனே இருந்திருக்கிறது விஜய் டிவி. இனிமேலும் இருக்கும். உலக அளவில் தமிழர்களின் பெருமையையும், திறமையையும் முன்னிறுத்துவதை தன் முதல் கடமையாக வைத்திருக்கிறது. இதனாலேயே விஜய் டிவியின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் உலகத் தமிழர்களின் அன்பும், ஆதரவும் பெருகிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி குழுமம் பற்றி வருகிற சில உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறோம். மார்ச் 1-2 தேதிகளில் இலங்கையில் நடக்கிற இசை நிகழ்ச்சிக்கும், விஜய் தொலைக்காட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
அது மட்டுமல்ல, இதற்கு முன் விஜய் தொலைக்காட்சி இலங்கையில் எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்தியதும் இல்லை. விஜய் டிவி குறித்து இது போன்று வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. விஜய் டிவி எப்போதும் தமிழர்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்பட்டு வந்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” -இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.