உக்ரைனில் உருவாகியுள்ள நெருக்கடியைத் தணிக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அமெரிக்க அமைச்சர் ஜான் கெர்ரியும், ரஷ்ய வெளியுறவுத்துறைச் செயலர் செர்கெய் லவ்ரொவ்வும் லண்டனில் சந்திக்கவுள்ளனர்.
க்ரைமீயா பகுதி உக்ரெய்னிலிருந்து பிரிந்து ரஷ்யாவுடன் சேர வேண்டுமா என்பது பற்றி அப்பகுதி மக்களிடையே வாக்கெடுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அமெரிக்க ரஷ்ய அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்தித்து விவாதிப்பதற்கான கடைசி சந்தர்ப்பம் இதுதான்.
அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும், உக்ரைனில் ரஷ்யத் தலையீடும் இந்த வாக்கெடுப்பும் சட்டவிரோதமானவை என்று வலியுறுத்துகின்றன. இந்தக் வாக்கெடுப்பு நடக்குமானால் அது மக்களிடையே கிரைமீயாவில் மோதல்களையும், ஸ்திரமின்மையையும் தூண்டிவிடும் என ஐரோப்பிய ஒன்றியத்துக்கான உக்ரைனின் தூதர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் ரஷ்யா இராணுவத் தலையீடு செய்யவில்லை, அதற்கு மாறாக தேர்தெடுக்கப்பட்ட அதிபருக்கு எதிராக கியெவ்வில் கிளர்ச்சி உருவானதே நெருக்கடிக்கு காரணம் என்றும் ரஷ்யா வாதிடுகிறது.