எகிப்தின் தலைநகரான கெய்ரோவின் வட பகுதியில் அமைந்திருக்கும் பாதுகாப்புப் படையினரின் தலைமையகத்தில், சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்ததில் 6 காவலர்கள் உட்பட 29 பேர் காயமடைந்தனர்.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமையன்று அதிகாலை 2 மணியளவில் இந்த குண்டு வெடித்தது.
“காரில் வந்த ஒரு ஆள் இந்தக் கட்டடத்திற்கு முன்பாக காரை நிறுத்திவிட்டு, பின்னால் வந்த மோட்டர் பைக்கில் ஏறிச்சென்றுவிட்டார். பிறகு அந்தக் கார் வெடித்தது” என பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு கூறுகிறது.
இந்த வெடிப்பில் கட்டடம் சேதமடைந்தது.
இந்த ஆண்டில் கெய்ரோ நகரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
கெய்ரோவில் நடந்த பல தாக்குதல்களுக்கு வடக்கு சினாயிலிருந்து செயல்படும், ஐஎஸ் குழுவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளே காரணமாக இருந்துள்ளனர்.
வியாழக்கிழமையன்று நடைபெற்ற தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
ஜிகாதித் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், புதிய தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு அதிபர் அப்துல் ஃபடா அல் – சிசி ஒப்புதல் அளித்த சில நாட்களிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.