ஐந்து தமிழ் மீனவர்களுக்கு மரண தண்டனையா? கருணாநிதி கண்டன அறிக்கை

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருப்பதைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,

மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி தாக்கிக் கைது செய்வதும், சிறையிலே அடைப்பதும், வதைப்பதும் தொடர்கதையாக இருந்து வரும் நிலையில், 2011ஆம் ஆண்டு நவம்பரில் தமிழக மீனவர்கள் ஐந்து பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படையினர், அவர்கள் போதைப் பொருள் கடத்தி வந்ததாக பொய் வழக்கு தொடுத்தனர். அவர்கள் மீன்பிடி படகில் ஹெராயின் போதைப் பொருளைக் கடத்தி, நடுக்கடலில் காத்திருந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று மீனவர்களிடம் கொடுத்ததாகக் கூறி, அவர்கள் எட்டு பேரையும் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களும் இளைஞர்கள். 45 வயதுக்கு உட்பட்டவர்கள். குறிப்பாக லாங்லெட் என்பவர் 19 வயதே நிரம்பியவர். அவர்கள் ஐந்து பேரையும் விடுவிக்க வேண்டுமென்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தமிழக க்யூ பிரிவு போலீசாரும், உளவுத் துறையினரும் இதுகுறித்து விசாரித்து, இந்த ஐந்து பேர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
death-sent
இந்த ஐந்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசின் சார்பிலும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. திரு. நரேந்திர மோடி அவர்கள் பிரதமராகப் பதவியேற்ற நேரத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இலங்கை சிறையிலே உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்ட பிறகும், இந்த ஐந்து பேரை விடுதலை செய்யவில்லை. கடந்த 35 மாதங்களாக விசாரணைக் கைதிகளாக இலங்கை சிறையிலே வாடி வதங்கிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு 30-10-2014 அன்று கொழும்பு நீதி மன்றம் தூக்குத் தண்டனை விதித்து
தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பினைக் கண்டித்து தமிழகத்திலே உள்ள மீனவர்கள் பல்வேறு போராட்டங்களைத் தொடங்கி, பல இடங்களில் வாகனங்களை உடைத்திருக்கிறார்கள். ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மத்தியிலே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 500 மீட்டர் தூரத்துக்கு தண்டவாளம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்து எரிக்கப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் மனைவிகள் தங்கள் கணவர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று கண்ணீரோடு பேட்டி அளித்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டு, இப்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த ஐந்து மீனவர்களைப் பற்றி, அவர்கள் சிறையிலே இருந்த போதே, மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர், கனிமொழி 13-12-2011 அன்றே மாநிலங்களவையில் பிரச்சினை எழுப்பி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலே மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அப்போது அந்தத் துறையின் அமைச்சராக இருந்த திரு. சல்மான் குர்ஷித் அவர்கள் கனிமொழிக்கு எழுதிய பதிலில் இது குறித்து இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் பாதிக்கப்பட்டிருந்த மீனவர்களோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு, தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்து வருவதாகவும், அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்கி அவர்கள் உயிர்கள் காப்பாற்றப்படுவதற்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகு மத்திய அரசினால் தொடர் நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் தற்போது அந்த மீனவர்கள் நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கு நீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து, கொழும்பு நகரில் உள்ள இந்தியத் தூதரகம் வழக்கறிஞர்கள் மூலம் இலங்கை உச்ச நீதி மன்றத்தில் “மேல் முறையீடு” செய்யும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் டெல்லியில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் “நமது மீனவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று நாம் கருதுவதால், இந்தப் பிரச்சினையை இலங்கை அரசிடமும் இந்தியா கொண்டு செல்லும். இந்தப் பிரச்சினையை சட்ட ரீதியாகவும், தூதரக உறவுகள் மூலமாகவும் இந்திய அரசு கையாளும்” என்று கூறியிருக்கிறார். இந்த வழக்கில் இலங்கை உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய நவம்பர் 14ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதால், மத்திய அரசு இந்தப் பிரச்சினை பற்றி உடனடியாக இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு தண்டிக்கப்பட்டுள்ள மீனவர்களின் விடுதலைக்கு வழி வகுக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதோடு;
இலங்கையில் கடும் மழை காரணமாக மலைச்சரிவு ஏற்பட்டு, 120 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டு, 150க்கு மேற்பட்ட மலையகத் தமிழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதுபற்றியும் இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மீட்கும் முயற்சிகளை விரைவுபடுத்துவதோடு, அந்தக் குடும்பங்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து தருவதற்கு இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

 

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *