உலகக் கோப்பை கபடிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டது. இந்திய அணி தொடர்ந்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டம் சனிக்கிழமை இரவு லூதியாணாவில் உள்ள குருநானக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தானை சந்தித்தது. தொடக்கத்தில் இரு அணிகளும் சம அளவில் புள்ளிகளைப் பெற்றன.
பின்னர் இந்திய வீரர்கள் சுதாரித்து ஆட்டத்தை தங்கள் வசம் கொண்டு வந்தனர். முடிவில் 48-39 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. சிறந்த பாடகர் மற்றும் சிறந்த பிடியாளருக்கான விருதையும் இந்திய வீரர்களே வென்றனர்.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வெற்றிக் கோப்பையுடன் ரூ.2 கோடி பரிசும், 2-ம் இடத்தைப் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு கோப்பை மற்றும் ஒரு கோடி ரூபாய் பரிசும் வழங்கப்பட்டன.