கோவையைச் சேர்ந்த ஏ.முருகானந்தம் டைம் நூறு பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நான்காவது இந்தியர் ஆவார்.
இவரை சுகாதாரப் போராளி என வர்ணித்துள்ளது. இவர் தன் மனைவியின் பிரச்சினைக்காகக் கண்டறிந்த பிரத்யேகத் தீர்வு, மலிவு விலை நாப்கின்கள்.
தென்னிந்தியாவின் சிறு நகரத்தைச் (கோயம்புத்தூர்) சேர்ந்த இவர், தன் மனைவி பழைய துணிகளைச் சேமிப்பதைப் பார்த்து எதற்காக எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர் மனைவி “என் மாதவிடாய்க் காலத்தில் இவை உதவும்” எனச் சொல்ல, அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்று தொழில்முனைவர் ஆனவர்’ என டைம் இதழ் தெரிவித்துள்ளது.
அருணாச்சலம் முருகானந்தம்
அருணாச்சலம் முருகானந்தம் (Arunachalam Muruganantham) கோவை ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஓர் கண்டுபிடிப்பாளர் ஆவார். சிற்றூர்களில் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியத் தேவையை வெளிப்படுத்தியவர். வணிகமுறையில் தயாரிக்கப்படும் மாதவிடாய்க்கால அணையாடைகளை விட மூன்றில் ஒரு பங்கு விலையில் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றவர். ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அணையாடைகளை தயாரித்து வருகிறார்.
வரலாறு
பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் அணையாடைகளை வாங்கவியலாத தமது குடும்பச்சூழலில் தமது மனைவி விடாய்க் காலத்தில் பயன்படுத்தப் பழைய துணித் துண்டுகளைச் சேகரிப்பதை கண்ட அருணாசலம் முருகானந்தம் இதற்கான எளிய வழிமுறையை காண விழைந்தார். பிரச்சினையை சரியாக அறிந்துகொள்ளப் பல சோதனைகளை மேற்கொண்டார். விலங்குகளின் இரத்தத்தைக் கொண்டு இவர் நிகழ்த்திய சில சோதனைகளால் குடும்பத்தாராலும் சமூகத்தாலும் வெளித்தள்ளப்பட்டார்.இறுதியில் மரச் சக்கை சரியானத் தீர்வாக அமையும் எனக் கண்டார். மலிவான விலையில் எளிய முறையில் குறைந்த பயிற்சியுடன் அணையாடைகளைத் தயாரிக்கக் கூடிய ஓர் இயந்திரத்தை கண்டுபிடித்தார்.
கண்டுபிடிப்பு
முருகானந்தம் ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி இந்த இயந்திரங்களை இந்தியா முழுமையிலுமுள்ள ஊரகப் பெண்களுக்கு விற்று வருகிறார். இதன்மூலம் அவர்கள் வேலை வாய்ப்புப் பெற்று வறுமையிலிருந்து மீள்கின்றனர். இவரது எளிய மற்றும் விலைத்திறன் மிக்க கண்டுபிடிப்பிற்காகவும் சமூகத்திற்கு இவராற்றும் தொண்டிற்காகவும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.இவரது முயற்சியை வணிகமயமாக்க பல நிறுவனங்கள் முன்வந்தபோதும் இவர் விற்பதற்கு மறுப்பதுடன் மகளிர் தன்னுதவிக் குழுக்களுக்கு வழங்கி வருகிறார்.