சுகாதாரத் துறை சார்பாக 22 நலத்திட்டங்கள், முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக சுகாதாரத் துறை சார்பாக 22 நலத்திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கையில்,

“விசையுறும் பயதினைப் போல் – உள்ளம்

வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்”

என்று சொன்னதைச் செய்யும் உடல் வேண்டி உருகுகிறார் மகாகவி பாரதியார்.

நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றால் தான் அறிவுச் செல்வம் உட்பட அனைத்துச் செல்வங்களையும் எளிதில் பெற்று மனித வளக் குறியீட்டில் தமிழகம் சாதனை படைக்க முடியும் என்பதால் தான் எனது தலைமையிலான அரசு, தமிழக மக்களின் உடல் நலன் பேணும் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த நான்கு ஆண்டுகளில் எடுத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறது.

சுகாதாரச் சேவைகள் மேலும் செம்மையுற்று, அதன் பயன்கள் மக்களை சென்றடையும் வகையில், நடப்பாண்டில் பின் வரும் புதிய திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆரம்ப சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்த கடந்த நான்காண்டுகளில் 172 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாது 122 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகளாக மேம்படுத்தப்பட்டு உள்ளன. இதன்  தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் 10 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் 6 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 12 கோடி ரூபாய்  செலவில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு இருப்பிட வசதிகள் ஏற்படுத்தும் வண்ணம், 60 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 கோடி ரூபாய் செலவில் செவிலியர் குடியிருப்புகள் கட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதுகாப்பான தரமான ரத்தம் மற்றும் ரத்தக் கூறுகள் நோயாளிகளின் தேவைக்கேற்ப உரிய நேரத்தில் கிடைக்கச் செய்வது இன்றியமையாததாகும்.

அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்படுவது மட்டுமல்லாது, டெங்கு போன்ற நோய்களினால் ஏற்படும் இறப்பை தடுப்பதற்கும் ரத்தம் அவசியமாகும். தமிழ்நாட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற 281 ரத்த வங்கிகளும், 415 ரத்த சேமிப்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் 12 புதிய ரத்த வங்கிகள், 10 ரத்த சேமிப்பு மையங்கள் மற்றும் 10 ரத்த சேகரிப்பு பிரிவுகள் 12 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையங்களை அரசு மருத்துவமனைகளில் எனது தலைமையிலான அரசு அமைத்து வருகிறது. தற்போது 64 பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையங்கள் செம்மையாக செயல்பட்டு வருகின்றன. இதனை, மேலும் வலுப்படுத்தும் வகையில், தாம்பரம், திருத்தணி, குடியாத்தம், ராஜபாளையம் மற்றும் விருதாச்சலம் ஆகிய 5 மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம் 3 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் டெங்கு, மூளைக் காய்ச்சல், சாலை விபத்து மற்றும் தற்செயலாக விஷம் அருந்துவது போன்ற அபாயகரமானவற்றிலிருந்து அவர்களை காப்பாற்ற, ராஜபாளையத்தில் 20 படுக்கை வசதி கொண்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவும், தீவிர சிகிச்சைக்குப் பின் நிலைப்படுத்தப்பட்ட குழந்தைகளை அடுத்த 48 மணி நேரத்திற்கு பராமரிக்கும் 5 படுக்கை வசதி கொண்ட ஸ்டெப் டவுன் வார்டும், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை முடிந்து கட்டணம் ஏதுமின்றி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் திட்டத்தை மேலும் செம்மையாக செயல்படுத்த 20 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 20 வாகனங்கள், 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் வாங்கி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்துகளினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதற்கும், விலை மதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்றவும் ‘108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை’ மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 406-லிருந்து 751-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நடப்பு ஆண்டில், முதல் கட்டமாக 50 பழைய ஆம்புலன்ஸ்களுக்கு பதிலாக புதிய ஆம்புலன்ஸ்கள் 5 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆபத்தான நிலையில் உள்ள இளம் குழந்தைகளுக்கு இளம் சிசு பராமரிப்பு மையம் சிறப்பாக சிகிச்சை அளித்து வருகிறது. இவைகளை வலுப்படுத்தும் பொருட்டு, முதல் கட்டமாக 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 8 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் இளம் சிசு பராமரிப்பு மையங்களுக்கு 10 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் வெண்டிலேட்டர் போன்ற புதிய உபகரணங்கள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

புற்று நோயை குணப்படுத்த அடையார் புற்று நோய் மையம் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அதை ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்த வேண்டும் என்று பாரத பிரதமருக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். எனது கோரிக்கையினை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்படி, சென்னை, அடையாறு புற்று நோய் மையம், மாநில உயர்நிலை மையமாகவும், ஒப்புயர்வு மையமாகவும் 120 கோடி ரூபாய் செலவில் வலுப்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், மார்பக புற்று நோயை கண்டறிந்து உறுதி செய்ய 15 மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு 2 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில், மேமோகிராபி மருத்துவக் கருவிகள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோய் தடுப்பு சிகிச்சை உட்பட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, காது வால் உள்வைப்பு அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை போன்ற ஐந்து வகை உயர் சிகிச்சைகளுக்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு வருடத்தில் அனுமதிக்கப்படும் காப்பீட்டுத் தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ஏற்படும் கூடுதல் செலவினத்தை அரசே ஏற்கும் வகையில், 10 கோடி ரூபாய் தொகுப்பு நிதி ஒன்று ஏற்படுத்தப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்ததற்கு இணங்க, மாநில அரசின் பங்காக 10 கோடி ரூபாயும், காப்பீட்டு தொகையிலிருந்து அரசு மருத்துவமனைகளுக்கு கிடைக்கப் பெறும் தொகையிலிருந்து ஒரு பங்கினையும் சேர்த்து ஒரு தொகுப்பு நிதி 2012-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. அதற்கென  177 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கூடுதலாக 25 கோடி ரூபாய் அரசின் பங்காக வழங்கப்படும்.

சர்க்கரை நோயாளிகளின் மூன்று மாத கால சர்க்கரை சராசரி அளவை கண்டறிந்து சிகிச்சை அளிக்க அனலைசர் கருவியும், நோய் தாக்கம் மற்றும் ரத்த உட்கூறுகளின் அளவை கண்டறிய செல் கவுண்டர் கருவியும் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் என, 302 அரசு மருத்துவமனைகளுக்கு 9 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

நிர்வாக வசதிக்காக கடந்த நான்கு ஆண்டுகளில் 49 புதிய வட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  10 வட்டங்களில், புதிய தாலுக்கா மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 39 புதிய வட்டங்களில் வட்டத்திற்கு ஒன்று வீதம், 39 வட்டம் சாரா மருத்துவமனைகள் அல்லது மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுக்கா மருத்துவமனைகளாக 70 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் உள்ள முட நீக்கியல் சிகிச்சை மையத்திற்கு, சிறப்பு மருந்துகளுக்காக 5 கோடி ரூபாய், சிறப்பு நிதியாக வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் பர்னாடு கதிர்வீச்சு நிலையத்தில் அணு மருத்துவத்தைப் பயன்படுத்தி, பொது மற்றும் தனியார் கூட்டாண்மை மூலம் 25 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் இமேஜிங் மற்றும் சிகிச்சை திட்டம் மேம்படுத்தப்படும்.

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல நிலையம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையில் மரபியல் காரணங்களால் ஏற்படும் நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஏதுவாக உயர்தர ஆய்வகம் ஒன்று 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Check Also

அதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்ய, அண்ணா பிறந்த நாளில் சூளுரை ஏற்க வேண்டும்:ஜெயலலிதா

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, கழகத் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். …