சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் எந்தத் தடையும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடரின்போது இந்த இரு அணிகளும்தான் ஸ்பாட் பிக்ஸிங், மேட்ச் பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கின.
இந்த விவகாரத்தில் இரு அணிகள் மீதும் கடுமையான புகார்கள் உள்ள காரணத்தால் அவர்களை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும் கவாஸ்கர் போன்ற அனுபவமிக்க ஒருவரை இடைக்கால தலைவராக நியமிக்க வேண்டும் என்று நேற்று உச்சநீதிமன்றம் தனது பரிந்துரையில் கூறியிருந்தது.
ஆனால் இரு அணிகளை விளையாட அனுமதிக்காமல் இருந்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று உச்சநீதிமன்றத்திடம் கிரிக்கெட் வாரியம் தனது பதில் மனுவில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இரு அணிகளுக்கும் தடை இலலை என்று அறிவித்தது.
மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரை நியமனம் செய்ய வேண்டும். ஐ.பி.எல். போட்டி முடியும் வரை அவர் இடைக்கால தலைவராக இருப்பார். கவாஸ்கர் நிர்வாக பணிகளை மட்டுமே கவனிப்பார். அவர் பதவி வகிக்கும் காலத்திற்கான ஊதியத்தை கிரிக்கெட் வாரியம் கொடுக்க வேண்டும்.
ஐ.பி.எல். போட்டி முடிந்த பின் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர்களில் ஒருவரை கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஐ.பி.எல். முடிந்த பிறகு துணைத் தலைவர் ஷிவ்வால் யாதவ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படுவார். அவர் ஐ.பி.எல்., கிரிக்கெட் வாரிய நிர்வாக பணிகளை கவனிப்பார். என உத்தரவிடப்பட்டுள்ளது