மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு நடத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கானுார் குளத்தை ஒட்டியவாறு தர்கா ஒன்று உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் உள்ள ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என, அனைத்து தரப்பு மக்களும் தர்காவுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
இந்த தர்காவில் கார்த்திகை தீப திருநாளின் போது ஒரு வாரம் கிராம மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
தர்கா ஹஜ்ரத், சம்சுதீன் கூறியதாவது: திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி என, எந்தவொரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதால், ஜாதி, மதம், இனம் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் கானுார் தர்காவுக்கு வருகின்றனர். கார்த்திகை தீபத்தின் போது, இப்பகுதியில் உள்ள மக்கள், தீபம் ஏற்றுவது வழக்கம்.
மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக இந்த தர்கா விளங்கி வருகிறது. அதேபோல, சந்தனக்கூடு உரூஸ் விழாவுக்கும், அனைத்து மதத்தினரும் தர்காவுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.