காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பாஜக அப்படியே ஜெராக்ஸ் எடுத்து, அதில் சின்னத்தை மாற்றி, தங்கள் வாக்குறுதிகளாக வெளியிட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜுன்ஜு என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது,
காங்கிரஸ் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தலுக்கான பல வேலைகளை ஆரம்பித்துவிட்டது. தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கு முன்னர், நாங்கள் ஏழை மக்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் என அனைவரையும் தேடிச் சென்று அவர்களது பிரச்சினைகளைக் கண்டறிந்தோம். குறைபாடுகளை தீர்க்க அவர்களது ஆலோசனைகளை பெற்று, அதன்மூலமே தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தயாரித்தது.
ஆனால் பாஜகவோ, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அப்படியே நகல் எடுத்து, அதில் காங்கிரஸ் சின்னத்தை மாற்றி, அக்கட்சியின் சின்னத்தை இணைத்து வெளியிட்டுள்ளது.
நாங்கள் மக்களை இணைத்து ஆட்சி செய்ய விரும்புகிறோம். பாஜக பெரிய தொழிலதிபர்களுக்காகவே ஆட்சி அமைக்க நினைக்கிறது. இதுதான் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் உள்ள வேறுபாடு.
ராஜஸ்தானில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை தந்தது. தற்போது காங்கிரஸ் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் அதனையே தர விரும்புகிறது. மேலும் முதியோர் ஓய்வூதியம், அனைவருக்கும் வீடு குறித்த உறுதிமொழிகளை காங்கிரஸ் அளித்துள்ளது. அவற்றைதான் பாஜக தனது அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
மேலும், பாஜக தனது தேர்தல் அறிக்கையில், ஊழலை முற்றிலும் ஒழிக்க சில வாக்குறுதிகளை கூறியுள்ளது. அதனை எப்படி அந்த கட்சி அமல்படுத்தும் என்பதை விளக்க வேண்டும். ஊழலை தடுக்க காங்கிரஸ் லோக்பால் மசோதாவை கொண்டு வந்தது. ஆனால் பாஜக அதனை முடக்க அனைத்து சதிகளையும் செய்தது.
ஊழல் குறித்து பேசும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கர்நாடகாவில் இருந்த அந்தக் கட்சியின் ஊழல் முதல்வர் பற்றி நினைவுகூர வேண்டும். அவர் ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறை சென்றவர்.
சத்தீஸ்கரிலோ, மத்தியப் பிரதேசத்திலோ எங்கு தேடினாலும் பாஜக பிரதமர் வேட்பாளரால் சுரங்க ஊழல் என்ற ஒன்றை பார்க்கவே முடியாது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கொண்டுவந்தது. அந்தச் சட்டம்தான் அதிகாரிகளும், முதல்வர்களும் செய்த ஊழல்களை மக்கள் முன்னிலையில் கொண்டுவந்தது.
என்றார் ராகுல் காந்தி.