மத்தியில் சமாஜ்வாதி கட்சி அங்கம் வகுக்கும் அரசு ஆட்சிக்கு வந்தால், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் வாக்குறுதி அளித்தார்.
பாலியல் பலாத்காரத்துக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கருத்து, தேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மொரதாபாத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முலாயம் சிங், “ஆண்பிள்ளைகள், ஆண்பிள்ளைகளாகத்தான் இருப்பார்கள். அவர்கள் தவறு செய்வார்கள். அதனால் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பது சரியல்ல” என்றார்.
மும்பையில் பெண் புகைப்பட நிருபர் மற்றும் டெலிபோன் ஆபரேட்டர் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதை மேற்கோள்காட்டிய அவர், “பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
இந்த சட்டத் திருத்தங்களின் மூலம், பாலியல் வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். தவறான தகவல்களைத் தெரிவிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆணும் பெண்ணும் காதலில் விழுகிறார்கள். தங்களுக்குள் வேற்றுமை வரும்போது பிரிந்து செல்கிறார்கள். அவர்களது நட்பு முறியும்போது, தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அந்தப் பெண் புகார் அளிக்கிறார். இதனால் இச்சட்டத்தில் மாற்றம் வேண்டும்” என்றார் முலாயம் சிங்.