இரண்டாம் உலகப் போரின் 70 வது நினைவு தினத்தில், முதல் முறையாக சீனா தனது ராணுவத்தின் 80 சதவிகித ஆற்றலை வெளிப்படையாகக் காட்டியது. பெய்ஜிங் நகரில் உள்ள தியனான்மென் சதுக்கத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ராணுவத்தின் ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போரின் 70 வது நினைவு தினத்தில் சீனா, தன்னுடைய ராணுவ ஆற்றலை உலகுக்கு உணர்த்தும் வகையிலான அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் சீன ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
ஏராளமான ராணுவ டாங்கிகள், போர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணைகள் இந்நிகழ்ச்சியில், சீன ராணுவ ஆற்றலைப் பறைசாற்றும் விதமாக உலகின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இருநூறுக்கும் மேற்பட்ட போர் விமானங்களில் 11 விமானங்கள் வண்ணமயமான புகையை வெளிப்படுத்திக்கொண்டே வானில் பறந்ததை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.
ராணுவ ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், எதிர்காலத்தில் இது படிப்படியாகக் குறைக்கப்படவேண்டும் என்ற கருத்தை அதிபர் ஜிஜின்பிங் குறிப்பிட்டார்.
ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகளின் நிறைவாக 70 ஆயிரம் பறவைகளை விடுதலை செய்து அவற்றிற்கு சுதந்திரம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பலவண்ணப் பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டு, இரண்டு மணிநேர ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி முடிவடைந்தது.